24,375 கோடி ரூபாய் செலவில் வருகிறது 75 புதிய மருத்துவ கல்லூரிகள் : 15,700 மருத்துவ இடங்களை உருவாக்கும் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை
24,375 கோடி ரூபாய் செலவில் வருகிறது 75 புதிய மருத்துவ கல்லூரிகள் : 15,700 மருத்துவ இடங்களை உருவாக்கும் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை
By : Kathir Webdesk
பாரத தேசம் முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ரூபாய் 24,375 கோடி செலவில் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எந்தந்த மாவட்டத்தில் தற்போது மருத்துவக் கல்லூரி இல்லையோ அங்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அடுத்த 5 ஆண்டுக்குள் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 24,375 கோடி செலவில் அமைக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம், மேலும் 15,700 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும். மருத்துவ துறையில் இதுவொரு மிகப்பெரிய விரிவாக்கம்" என்றார்.
மேலும், கரும்பு விவசாயிகளின் நலனுக்காக மிக முக்கியமான முடிவை மத்திய மோடி அரசு எடுத்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டிற்கான 6 மில்லியன் டன்களுக்கான ஏற்றுமதி மானியத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.