அனைத்து தரப்பு மக்களின் மேம்பாடும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுமே மோடியின் நோக்கம்- நிர்மலா சீதாராமன்!
ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளை கைவிட்ட கட்சி காங்கிரஸ் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
By : Karthiga
பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது :-
பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசாங்கத்தை மாற்றி விடுவார்கள் என்று காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் பொய்யாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தை காப்பது குறித்து பேசுவதை காங்கிரஸ் தலைவர்கள் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களால் சொந்த கட்சியின் கொள்கைகளை காப்பாற்ற முடியவில்லை. ஒரு குடும்பத்தின் நலன்களுக்காக கொள்கைகளை கைவிட்ட கட்சி காங்கிரஸ்.
சோனியா காந்தியை கட்சி தலைவராக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த சீதாராம் கேசரியை அறையில் வைத்து பூட்டியதை காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். முஸ்லிம்கள் பயனடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அரசாங்க சட்டத்துக்கு விரோதமான மத ரீதியான இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் செயல்படுத்துகிறது . முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அம்பேத்கருக்கு என்ன மரியாதை அளித்தனர்? 1990 ஆம் ஆண்டில் தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது. அம்பேத்கர் குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி இல்லை. பின்தங்கிய மக்களின் வாழ்க்கை மேம்பட முன்னுரிமை கொடுத்து திட்டங்களை வகுத்தவர் பிரதமர் மோடி. அனைத்து தரப்பு மக்களின் மேம்பாடும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் அவரின் ஆட்சியின் நோக்கம் இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
SOURCE :Dinamani