அன்னை பாரதத்தின் அறிவு பெட்டகம், பெருமைகளின் பீடம் சாய்ந்தது !! சுஷ்மா சுவராஜிற்கு தலைவர்கள் அஞ்சலி!
அன்னை பாரதத்தின் அறிவு பெட்டகம், பெருமைகளின் பீடம் சாய்ந்தது !! சுஷ்மா சுவராஜிற்கு தலைவர்கள் அஞ்சலி!
By : Kathir Webdesk
பா.ஜ.க மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
ஏற்கெனவே கடந்த 2016-இல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர் நலமுடன் இருந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, உலகின் மூலை முடுக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அவரிடம் சுட்டுரை மூலம் உதவி கோரினால், சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் வாயிலாக, அவர்கள் நாடு திரும்புவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வார். இதனால், மக்கள் எளிதில் அணுகக்கூடிய தலைவராக விளங்கினார்.
மிகச்சிறந்த அரசியல்வாதியான சுஷ்மா, பொதுவாழ்க்கைக்காக , தனது சொந்த வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இந்திய அரசியல் வரலாற்றில் ஒளி வீசியவர். அறிவுப் பெட்டகம், பெருமைகளின் பீடம் ஒரு சிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டது என பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் அஞ்சலி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
சுஷ்மா சுவராஜ் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பொது வாழ்க்கையில் கண்ணியம், துணிச்சல், மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காட்டியவர். மிகவும் நேசித்த தலைவரை நாடு இழந்துவிட்டது. அவர் எப்போதும் இந்தியர்கள் நினைவில் இருப்பார்.
துணை ஜனாதிபதி வெங்கையா
சுஷ்மா மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரின் மரணம் இந்தியாவிற்கு பெரிய இழப்பு, ஒரு சிறந்த அரசியல்வாதி, மிக சிறந்த எம்.பி., யாகவும், நல்ல பேச்சாளராகவும், நிர்வாக திறன் கொண்ட சிறந்த தலைவராகவும் விளங்கினார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
சிறந்த பார்லி. உறுப்பினர்,, திறமையான பேச்சாளர், என்றென்றும் நினைவில் வைக்கப்படுவார்.
பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா
சுஷ்மா சுவராஜ் மறைவு மனதுக்கு பெரும் வேதனையைத் தந்துள்ளது. இந்திய அரசியலில் தனி முத்திரையைப் பதித்து விட்டு சென்றுள்ளார். மிகச் சிறந்த பேச்சாளர், மக்களுக்காக சிறந்த சேவையாற்றியவர்.
மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்
சுஷ்மா சுவராஜ் டுவிட்டை பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அவர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து டிவிட் செய்து இருந்தார். ஆனால் இப்போது அவர் இல்லை. . அவர் மறைந்துவிட்டார் என்பதை என்னால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை
காங். எம்.பி. ராகுல்
சுஷ்மா சுவராஜ் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு அசாதாரணமான தலைவர். மிகச் சிறந்த பேச்சாளர். அருமையான நாடாளுமன்ற வாதி. கட்சி பாகுபாடில்லாமல் அனைவருடனும் நட்பு பாராட்டியவர்.
வெளியுறத்துறை மந்திரி ஜெய்சங்கர்
சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த செய்தியை ஏற்றுக்கொள்வது கடினம். ஒட்டுமொத்த தேசமும் வருத்தமடைகிறது
ஜே.பி.நட்டா
'சுஷ்மா சுவராஜ் கண்ணியமான நாடாளுமன்றவாதி' சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு பாஜக செயல் தலைவர்
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.
சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவர் எங்களை விட்டு விரைவில் செல்வார் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. நான் இளைஞர் காங்கிரசில் இருந்தபோது 1977 முதல் அவரை எனக்கு நன்கு தெரியும். கடந்த 42 ஆண்டுகளாக நாங்கள் நண்பர்களாக இருந்தோம்
மார்க்சிஸ்ட் எம்.பி., ரெங்கராஜன்
மிகத் திறமையான வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ். விவரங்களுடன் எதையும் பேசக்கூடியவர்; மகத்தான திறமையும் சக்தியும் கொண்டவர்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகளுக்கு உதாரணமாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். பெண்கள் வாழ்வில் முன்னேறுவது தான் சுஷ்மா சுவராஜூக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்
பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
சுஷ்மா சுவராஜ் மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பு. எளிய மக்களுடன் அன்புடன் பழகும் தலைவராக திகழ்ந்தவர். அவருடைய மறைவால் மிகப்பெரிய ஆளுமையை இழந்திருக்கிறோம்
திமுக எம்.பி., கனிமொழி
ஆளுமையும் அன்பும் நிறைந்த பெண் தலைவராக இருந்தவர். கட்சிகள், மாநிலங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு உதவியவர் சுஷ்மா சுவராஜ்
அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன்
சுஷ்மா சுவராஜின் மறைவு இந்திய அரசியலுக்கு இழப்பு. சுஷ்மா சுவராஜ் மிகச்சிறந்த பேச்சாளர்; அறிவுப்பூர்வமான உரைகளை நிகழ்த்தியவர்
வீட்டில் பிரமுகர்கள் அஞ்சலி
சுஷ்மா மறைந்ததையடுத்து அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. பல்வேறு தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.