தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் விழாவில் மகளிரை மதிக்கும் மாண்பையும் பெருந்தன்மையின் பேராற்றலையும் உணர்த்திய மோடி!
டெல்லியில் நடந்த விழாவில் 23 பேருக்கு தேசிய படைப்பாளிகள் விருதை பிரதமர் மோடி வழங்கினார்.
By : Karthiga
தங்கள் டிஜிட்டல் படடைப்புகள் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் டிஜிட்டல் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் வகையில் முதல் முறையாக தேசிய படைப்பாளிகள் விருது என்ற விருதை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பசுமை சாம்பியன், தூய்மை தூதர், சிறப்பாக கதை சொல்பவர், பிரபலமான படைப்பாளி, சமூக மாற்றத்துக்கான சிறந்த படைப்பாளி ,மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய வேளாண் தூதர், கலாச்சார தூதர் உட்பட 20 பிரிவுகளின் விருது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெற ஒன்றரை லட்சம் பரிந்துரைகள் பெறப்பட்டன. வாக்கெடுப்பு சுற்றின் போது சுமார் பத்து லட்சம் ஓட்டுகள் போடப்பட்டன. அதன் அடிப்படையில் 23 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மூன்று பேர் சர்வதேச படைப்பாளிகள் ஆவர். 23 பேருக்கும் தேசிய படைப்பாளி விருது வழங்கும் விழா டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்று 23 பேருக்கும் விருது வழங்கி சிறப்பித்தார். சிறந்த கதை சொல்பவர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி விருது பெற்றார். பசுமை சாம்பியன் பிரிவில் பங்தி பாண்டேவும் கலாச்சார தூதர் பிரிவில் பாடகி மைதிலி தாக்குரும் விருது பெற்றனர். பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
படைப்புகளை உருவாக்குபவர்கள் இந்தியாவை உருவாக்குவோம் என்ற இயக்கத்தை உருவாக்க வேண்டும். இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியம் ஆகியவற்றை உலகத்துடன் கதைகளாக பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் கதைகளை ஒவ்வொருவருக்கும் சொல்வோம். உங்களுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் நிறைய லைக்ஸ் கிடைக்கக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குங்கள். அதன் மூலம் உலகளாவிய பார்வையாளர்களை நாம் ஈர்க்க வேண்டும். பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். தங்கள் உள்ளடக்கத்தில் பெண் சக்தியை புகழும் கருத்துக்களை இடம்பெறச் செய்ய வேண்டும்.
படைப்பாற்றல் என்பது தவறான பார்வையைக் கூட சரி செய்து விடும். நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. முதல் முறை வாக்களிக்கப் போகும் வாக்காளர்கள் தங்கள் பொறுப்பை உணர படைப்பாளிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளைஞர்களிடையே நிலவும் போதை பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்கள் உள்ளடக்கம் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI