தேசியத் தளவாடக் கொள்கை - பிரதமர் மோடி வெளியிட்ட தகவல் என்ன?
போக்குவரத்து செலவை குறைக்கும் நோக்கத்துடன் கூடிய தேசிய தளவாடக் கொள்கையை பிரதமர் மோடி வெளியிட்டார்
By : Karthiga
போக்குவரத்துக்கான செலவினை குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள தேசிய தளவாட கொள்கையை டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி வெளியிட்டார் .அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
தேசிய தளவாடக் கொள்கை ஆனது போய் சேர வேண்டிய விநியோகத்தை விரிவுபடுத்துவதையும், தொழில் நிறுவனங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதையும் நோக்கமாகவும் கொண்டுள்ளது .இது தளவாடத் துறையில் உள்ள சவால்களை தீர்க்கும் பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்துடன் சேர்ந்து உள்கட்டமைப்பு பெருக்கத்துக்கானது. இது போக்குவரத்து செலவுகளை குறைக்கும்.
இந்திய தயாரிப்புகள் உலக சந்தையை பிடிக்க நாடு அதன் ஆதரவு அமைப்பை வலுப்படுத்த வேண்டும். தேசிய தளவாட கொள்கையானது ஆதரவு அமைப்பை நவீனமாக்க உதவுகிறது. இந்தியா வலிமை வாய்ந்த ஜனநாயகமாக உருவாகி வருகிறது என்று உலகளாவிய நிபுணர்கள் கூறுகிறார்கள். நமது உறுதிபாட்டையும் படிப்படியான முன்னேற்றத்தையும் அவர்கள் பாராட்டுகிறார்கள் .தளவாடத் துறையை வலுப்படுத்துவதற்கு நமது அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. சுங்கத்துறையில் முகமில்லாத அளவீடு முறை வந்துவிட்டது .மின்னணு வழி சீட்டுகள் வந்து விட்டன. தளவாடத்துறையில் பாஸ்டேக் முறை செயல் திறனை கொண்டு வருகிறது. டிரோன்கள் தளவாடத்துறையை முன்னேற்றும். இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. உற்பத்தி மையமாக உருவாகி வருகிறது.
உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை முறையை அரசு அறிவித்ததை உலகம் ஏற்று கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்