Kathir News
Begin typing your search above and press return to search.

ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவகிரகங்கள்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில் 18 சக்தி பீடங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றாக திகழ்கிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் ஆலயம்.

KarthigaBy : Karthiga

  |  1 March 2024 1:15 PM GMT

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தேவிபட்டினம் என்கிற இடத்தில் உள்ள உலகநாயகி அம்மன் ஆலயத்தில் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவக்கிரகங்கள் காட்சியளிக்கின்றனர். பிரம்மனிடம் வரம் பெற்ற மகிஷாசுரன் தேவர்களையும் ரிஷிகளையும் பலவாறு துன்புறுத்தினான் .மகிஷாசுரன் தன்னுடைய அழிவு ஒரு பெண்ணால் தான் ஏற்பட வேண்டும் என்று வரம் பெற்று இருந்தான். எனவே அன்னை பராசக்திக்கு சிவபெருமான் சூலத்தையும் , திருமால் சக்ராயுதத்தையும், பிரம்மா கமண்டலத்தையும் அளித்தனர். அதேபோல் இந்திரன் வஜ்ராயுதத்தையும் அக்னி பகவான் சக்தி எனும் ஆயுதத்தையும் ,எமன் தண்டத்தையும் நிருதி கத்தியையும், வருணன் பாசத்தையும், வாயு பகவான் வில்லையும், குபேரன் பாண பத்திரத்தையும் வழங்கினர்.


மேலும் சமுத்திர ராஜன் தாமரை மலர் வழங்கினான். சூரியன் ஒளிக்கதிர்களை கொடுத்தார். ஆதிசேஷன் நாக ஆபரணங்களை அளித்தார். சர்வ சக்திகளையும் பெற்ற பராசக்தி 18 கரங்களில் 18 விதமான ஆயுதங்களை தாங்கி மகிஷாசுரனை வதம் செய்தாள். வதம் புரிந்த உடன் இங்கு வந்து தேவி சாந்தமடைந்து படுத்த வண்ணம் சுயம்புவாக எழுந்தருளினாள். ராவணனை வெல்லும் நோக்கத்தோடு இலங்கை செல்ல இருந்த ராமர் மற்றும் லட்சுமணர் அனுமன் உள்ளிட்ட வானர படையினர் அனைவரும் ஒப்பூரில் அருளும் வெயிலுகந்த விநாயகரை வழிபட்டனர். பின்னர் கடற்கரை ஓரமாகவே பயணித்த ராமரும் அவரது படைகளும் தேவிப்பூர் எனும் இந்த தேவிபட்டினத்தில் முதலில் திலகேஸ்வரப் பெருமானை வணங்கி பின் வீரசக்தி பீடத்தில் வீற்றுஅருளும் மகிஷாசுரமர்த்தினையின் மறு உருவமான அன்னை உலகநாயகிக்கு தீர்த்தம் உண்டாக்கி அபிஷேகித்து ஆன்ம சக்தி அடைந்தனர்.


உலகநாயகி அம்மனை வணங்கி அவரது ஆசி பெற்ற பின்னர் கடல் பகுதியில் நவக்கிரகங்களை கல்லால் நிறுவி வழிபட்டனர். அப்போது கடலில் அலைகள் முன்னெழுந்து வரவே இங்கு அருள்புரியும் ஆதி ஜகந்நாதரை ராமருள்ளிட்ட அனைவரும் ஆராதித்தனர். ஜெகந்நாத பெருமாள் ஆணைக்கி அடங்கிய அலைகள் பின்னே செல்ல நவகிரக நாயகர்களை நலமுடன் பூஜித்த பிறகு வானர படையுடன் இலங்கை சென்றடைந்தார். ராமபிரான் கடற்கரைக்கு சற்று உட்புறமாக அமைதியான சூழலில் அமைந்துள்ளது உலகநாயகி அம்மன் ஆலயம் .கிழக்கு முகமாக ஏழு கலசங்களை கொண்ட ஐந்துநிலை ராஜகோபுரம் அற்புதமாக காட்சியளிக்கிறது .நான்கு தூண்களை கொண்ட முகமண்டபம் அழகுற காணப்படுகிறது. கருவறை உள்ளே சுயம்பு வடிவமாக எழுந்தருளி பேரருள் பரப்புகின்றாள் உலகத்தை காத்தருளும் அன்னை உலகநாயகி.


சுதையாக முழு உருவச்சிலையும் இங்கு காணப்படுகிறது. இந்த உலகநாயகி அம்மனை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் .மன தைரியம் கூடும். எதிரிகளால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாமல் ஆலயம் திறந்திருக்கும் .சக்தி பீடநாயகியாக மட்டுமில்லாமல் கிராம தேவதையாகவும் குலதெய்வமாகவும் திகழும் உலகநாயகியை வழிபட்டு வாழ்வில் உயர்வு பெறுவோம் .ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி கடற்கரை சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தேவிபட்டினம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News