நீரவ் மோடி விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்.. லண்டன் நீதிமன்றம் தகவல்.!
நீரவ் மோடி விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்.. லண்டன் நீதிமன்றம் தகவல்.!
By : Kathir Webdesk
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு தப்பி ஓடினார் நீரவ் மோடி. இவர் வைரம் வியாபாரத்திற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கினார். இதன் பின்னர் பணத்தை முறையாக கட்டாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்துதான் அவர் லண்டனுக்கு தப்பி சென்றார்.
இதனிடையே இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத்துறை மேற்கொண்டது. அவரை நாடு கடத்தும் வழக்கானது லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு நீரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்றன. இறுதி வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் பிப்ரவரி 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். அதனடிப்படையில் நீதிபதி சாமுவல் கூஸி வியாழக்கிழமை அளித்துள்ள தீர்ப்பில், நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அப்போது வழக்கு விசாரணைக்கு நீரவ் மோடி காணொலி முறையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவு, பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேலின் ஒப்புதலைப் பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும். இதன் பின்னர் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் முக்கிய திருப்பமாக இந்த தீர்ப்பு அமைய உள்ளது. நீரவ் மோடி இந்தியாவுக்கு வந்த பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.