நேபாளம் : பிரதமர் ஓலிக்கு எதிராக சொந்தக் கம்யூனிஸ்ட் கட்சியினரே போர்க்கொடி - பதவி விலகுவாரா? #Nepal #Oli
நேபாளம் : பிரதமர் ஓலிக்கு எதிராக சொந்தக் கம்யூனிஸ்ட் கட்சியினரே போர்க்கொடி - பதவி விலகுவாரா? #Nepal #Oli

நேபாள பிரதமர் K P ஓலி பதவி விலகுமாறு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கோரியுள்ளதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) தெரிவித்துள்ளது.
இந்தியா தன்னை தனது பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பதாக நேபாளப் பிரதமர் ஓலி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு நேபாள முன்னாள் பிரதமர் - புஷ்பா கமல் தஹால் கண்டனம் தெரிவித்தார். "அவரை நீக்க இந்தியா சதித்திட்டம் தீட்டுகிறது என்ற பிரதமரின் கருத்து அரசியல் ரீதியாக சரியானதும் அல்ல, இராஜதந்திர ரீதியாக பொருத்தமானதும் அல்ல. பிரதமரின் அத்தகைய அறிக்கை அண்டை நாடுகளுடனான நம் உறவை சேதப்படுத்தும் " என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சியின் மற்ற மூத்த தலைவர்கள் மாதவ் குமார் நேபாளம், ஜலநாத் கானல், துணைத் தலைவர் பாம்தேவ் கவுதம் மற்றும் நாராயங்காஜி ஸ்ரேஸ்தா ஆகியோர், ஓலி, இந்தியா மீதான தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வழங்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரினர்.
"அத்தகைய மரியாதையில்லாத மற்றும் அரசியல் சாராத கருத்துக்களை பேசியதற்காக பிரதம மந்திரி தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும்" எனக் கேட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
கலபானி போன்ற இந்திய பிரதேசங்களை உள்ளடக்கிய நேபாள நாட்டின் சர்ச்சைக்குரிய புதிய வரைபடத்தை ஓலி சமீபத்தில் வெளியிட்டார். சீனா, ஒரு நேபாளி கிராமத்தை தன்னுடன் இணைத்து, பிற பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் நேபாளம் இந்த வேலையை செய்தது, நேபாள மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.