நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் ஆறு பேர் பலி-பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேபாள பிரதமர் உயிர் தப்பினார்
நேபாளத்தை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது இதில் ஆறு பேர் பலியாகினர்
By : Karthiga
நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டோட்டி மாவட்டத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:12 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரெக்டர் அளவுகளில் 6.6 புள்ளிகள் ஆக பதிவானது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த டோட்டி மாவட்டமே குலுங்கியது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக அதிர்ந்தன. வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் மலை பங்கான பகுதிகளில் இருந்து ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் அந்த பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்தன.
இதனால் பயந்து போன மக்கள் வீடுகளுக்கு திரும்பாமல் இரவு முழுவதையும் வீதிகளிலேயே கழித்தனர். இதற்கிடையே நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பெண்கள், சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர்.அவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்களில் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் மாயமாகி இருப்பதாக கூறப்படும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்ப பணிகளுக்காக ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர் .இதனிடையே நிலநடுக்கம் தாக்கிய போது டோட்டி மாவட்டத்தில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்காதி மாவட்டத்தில் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது அங்கும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.எனினும் நிலநடுக்கத்தால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஷேர் பகதூர் தூபா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் நிலநடுக்கத்தில் இறந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் அவர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைவு படுத்தவும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளதாக கூறினார்.