Kathir News
Begin typing your search above and press return to search.

விரைவில் வரப்போகிறது எலக்ட்ரிக் ஏர் டாக்ஸி!

இந்தியாவின் பொதுப் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் ஏர் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வரப் போகின்றன. இதற்கான முன்னெடுப்பில் இண்டிகோ நிறுவனம் இறங்கியுள்ளது.

விரைவில் வரப்போகிறது எலக்ட்ரிக் ஏர் டாக்ஸி!

KarthigaBy : Karthiga

  |  17 Nov 2023 3:07 AM GMT

சாலை மார்க்கமாக செல்லும் டாக்ஸிகளை போல வானில் பறக்கும் டாக்ஸிகள் வரப்போகிறது. கிட்டதட்ட ஹெலிகாப்டர் மாதிரி தான். இது முழுவதும் மின்சாரத்தின் மூலம் இயங்கக்கூடியது. இந்தியாவை பொறுத்தவரை மின்சார வாகனங்கள் பலவும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. மக்களும் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் வானில் பறக்கும் ஏர் டாக்ஸிகள் என்பது புதிது தான். விமான சேவைக்கு பெயர் போன இண்டிகோ நிறுவனத்தின் கிளை நிறுவனமான இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் (IGE) தான் எலக்ட்ரிக் ஏர் டாக்ஸிகளை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவை சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

இவர்கள் ஒன்றிணைந்து வரும் 2026ஆம் ஆண்டு எலக்ட்ரிக் ஏர் டாக்ஸி சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளனர். இரு நிறுவனங்களும் சேர்ந்து 200 ஏர் டாக்ஸிகளை வாங்க திட்டமிட்டுள்ளனர். ஏர் டாக்ஸிகள் வாங்குவதற்கான நிதி மட்டுமின்றி நிறுத்துமிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், பைலட்களுக்கு பயிற்சி அளித்தல், இயக்கத்திற்கான போதிய வசதிகளை செய்து தருதல், உரிய அனுமதி பெறுதல் போன்ற விஷயங்களையும் மேற்கொள்வர்.

இதன்மூலம் அப்படியென்ன நன்மை வந்துவிடப் போகிறது? என்று கேட்கலாம். அதிவிரைவு பயணம் என்பது தான் பதிலாக முன்வைக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் சாலை மார்க்கமாக சென்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உண்டாகிறது. இதற்கு மாற்றாக பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தினசரி பயன்பாட்டிற்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இருப்பினும் மெட்ரோ ரயில் சேவையை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும்.

ஏர் டாக்ஸிகளை பொறுத்தவரை நாம் இருக்கும் இடத்தை தேடி வரும். இதில் பைலட், அதாவது ஓட்டுநர் தவிர்த்து 4 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கலாம். அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வரை பயணிக்கும். சார்ஜ் ஏற்ற குறைந்த நேரமே போதும் என்பதால் குறுகிய கால இடைவெளியில் அதிகப்படியான டாக்ஸிகளை இயக்க முடியும். உதாரணமாக தலைநகர் டெல்லியில் கன்னாட் பிளேசில் இருந்து குருகிராம் வரையிலான 27 கிலோமீட்டர் தூரம் செல்ல சுமார் 90 நிமிடங்கள் ஆகின்றன.அதுவே ஏர் டாக்ஸியில் சென்றால் வெறும் 7 நிமிடங்கள் போதும். சல்லுனு பறந்து போய் விடலாம். இது பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் இந்திய பொதுப் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News