இனி விமானப்பயணம் வசதி உள்ளவர்களுக்காக மட்டும் இல்லை.. மோடி அரசினால் நிகழும் மாற்றம்..
By : Bharathi Latha
இந்தியாவில் விமானப் பயணம் இனி மேல்தட்டு மக்களுக்கானதாக மட்டும் இருக்காது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்திய விமானவியல் சங்கத்தின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மண்டல இணைப்புத் திட்டமான உடான், விமான நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற தொலைநோக்கு திட்டங்கள் மூலம் விமானப் பயணத்தை சாதாரண மக்களுக்கானதாகவும் மாற்றிய பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் என்று அவர் தெரிவித்தார். விமானக் கட்டணம் குறைந்துள்ளதாகவும் இப்போது விமானங்களில் சாதாரண மக்கள் அதிகம் பயணம் செய்வதை பரவலாகக் காண முடிகிறது என்றும் அவர் கூறினார்.
2014 ஆம் ஆண்டில் 75 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் இரு மடங்காகி இப்போது 150 ஆக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஏஇஎஸ்ஐ அமைப்பு, கண்டுபிடிப்புகளின் மையமாகவும், ஒத்துழைப்பிற்கான தளமாகவும், நம் நாட்டில் விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு ஊக்க சக்தியாகவும் இருந்து வருகிறது என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், குறிப்பாக விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் கூறினார். எதிர்காலத்தில் இந்தியா இன்னும் பெரிய உயரங்களைத் தொடும் என்றும் அறிவியல் சமூகத்திற்கு ஆதரவளிப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
Input & Image courtesy: News