ஐயப்ப பக்தர்களுக்கு வழிகாட்டும் அய்யன் செயலி- சபரிமலை காட்டு வழி பயணத்திற்காக வனத்துறை அறிமுகம்!
சபரிமலைக்கு காட்டு வழியாக பயணம் செய்யும் ஐயப்ப பக்தர்களுக்கு வழிகாட்டும் 'அய்யன்' செயலியை வனத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
By : Karthiga
மண்டல சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில் காட்டு வழி பாதையான எருமேலி வழியாக நடை பயணமாக 2700 பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். அதேபோல் புல்மேடு வழியாக 1060 பேர் நடைபெறமாக சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்துள்ளனர்.
காட்டு வழி பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு கேரள வனத்துறை சார்பில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக வனத்துறை 'அய்யன்' என்ற பெயரில் செயலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்காக கியூ ஆர் கோடு ஒன்றை வனத்துறையினர் வடிவமைத்து உள்ளனர்.இந்த கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து புதிய ஐயன் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் சபரிமலைக்கு செல்ல முக்கிய வழித்தடங்களில் கிடைக்கும் பல்வேறு சேவைகளை தெரிந்துகொள்ளலாம். ஆஃப்லைனில் வேலை செய்யும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சன்னிதானத்திற்கு செல்லும் தூரம், மருத்துவ அவசர சிகிச்சை பிரிவு, இலவச குடிநீர் வழங்கும் மையங்கள், யானை படைப்பிரிவு போன்ற பல்வேறு தகவல்களும் செயலியில் உள்ளன. ஐயப்ப பக்தர்கள் பின்பற்ற வேண்டிய சடங்குகள் மற்றும் பொதுவான வழிமுறைகளும் இந்த செயலியில் உள்ளன. விவரங்கள் அனைத்தும் ஆங்கிலம் ,மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது.
SOURCE :DAILY THANTHI