எல்லைப்படை வீரர்களைக் கொண்டாடும் மோடி அரசாங்கம்.. பெருமிதமாகக் கூறிய அமித்ஷா..
By : Bharathi Latha
ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாகில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் 59-வது அமைப்பு தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். பி.எஸ்.எஃப்-இன் வருடாந்திர இதழான 'பார்டர்மேன்' இதழையும் அமித் ஷா வெளியிட்டார். இந்த நிகழ்வில் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
"மரணம் வரை கடமை" என்பது எல்லைப் பாதுகாப்புப் படையின் முழக்கம் மட்டுமல்ல, இன்று வரை 1,900-க்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்கள் வாழ்க்கையின் உயர்ந்த தியாகங்களைச் செய்ததன் மூலம் இந்த முழக்கத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்துள்ளனர் என்று அமித் ஷா தமது உரையில் குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு எல்லையில் ஒரு பாதுகாப்புப் படையை நிறுத்துவது என்ற முக்கியமான முடிவை எடுத்தார் என்று கூறிய திரு அமித் ஷா, இந்த முடிவின் கீழ், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷின் அணுக முடியாத எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு எல்லைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், எல்லைப் பாதுகாப்புப் படை இந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், நமது துணிச்சலான வீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் வீரத்தால் நமது எல்லைகள் பாதுகாக்கப்படும்போது மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் அமித் ஷா கூறினார். நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்று அவர் கூறினார். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நாட்டின் இளைஞர்களுக்கு ஒழுக்கத்தின் செய்தியையும் வழங்குகிறார்கள் என்று அமித்ஷா கூறினார்.
Input & Image courtesy: News