ஈஷாவிற்கு வந்த கிரிக்கெட் வீரர்... பழங்குடி குழந்தைகளுக்கு ஸ்பெஷல் அட்வைஸ்!
By : Mohan Raj
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான திரு. வெங்கடேஷ் பிரசாத் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சமீபத்தில் வருகை தந்தார்.
ஈஷாவில் சில தினங்கள் தங்கியிருந்த அவர் தியானலிங்கம், லிங்கபைரவி, ஆதியோகி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தார். ஈஷாவின் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்த அவர் பழங்குடி குழந்தைகளுக்கு தினமும் மாலை அன்னதானம் வழங்கப்படுவதை மிகவும் பாராட்டினார்.
அத்துடன், அக்குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு உணவும் பரிமாறினார். வெங்கடேஷ் பிரசாத்துடன் அவருடைய குடும்பத்தினருடன் உடன் வந்திருந்து பழங்குடி குழந்தைகளுக்கு உணவு பரிமாறினர்.
இதற்கிடையே பழங்குடி குழந்தைகளுடன் தமிழில் கலந்துரையாடிய வெங்கடேஷ் பிரசாத், “கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளையும் விளையாட வேண்டும். நான் பள்ளியில் படிக்கும் போது கோ கோ, கபடி, கால்பந்து, ஹாக்கி என எல்லா விளையாட்டுக்களையும் விளையாடுவேன். பின்னர் தான் கிரிக்கெட் ஆடினேன். நான் படித்த பள்ளிக்காக ஹாக்கி ஆடினேன். அதனால் கிரிக்கெட் மட்டுமின்றி நாம் அனைத்து விளையாட்டுகளையும் ஆட வேண்டும்” என்றார்.
கலந்துரையாடலுக்கு பிறகு அக்குழந்தைகளுடன் சேர்ந்து பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனமும் ஆடி மகிழ்ந்தார்.