ஜம்மு காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்கும் அமைப்பா.. உடனே சுதாரித்து தடை செய்த மோடி அரசு..
By : Bharathi Latha
பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடியின் சமரசமற்ற கொள்கையின் அடிப்படையில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்பின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967-ன் பிரிவு 3 (1)-ன் கீழ் ஜம்மு-காஷ்மீர் தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பை 'சட்டவிரோத அமைப்பு' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நோக்கில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தைப் பரப்புவது மற்றும் ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்காகப் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டுவது கண்டறியப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடியின் சமரசமற்ற கொள்கை அடிப்படையில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்பின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தெஹ்ரீக்-இ-ஹுரியத்தின் நோக்கம் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதாகும். இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், ஜம்மு-காஷ்மீரில் பிரிவினை வாதத்தைத் தூண்டுவதற்காக பயங்கர வாதத்தையும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தையும் தூண்டுவதில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், ஆயுதச் சட்டம், ஆர்பிசி மற்றும் ஐபிசி போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் பல குற்றவியில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Input & Image courtesy:News