பிரம்மாண்டமான நீர்மூழ்கி கண்ணாடி இழை இணைப்பு திட்டம்.. தொடங்கி வைத்த பிரதமர்..
By : Bharathi Latha
கொச்சி-லட்சத்தீவு நீர்மூழ்கி கண்ணாடி இழை இணைப்பு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ரூ.1,150 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் கொச்சி-லட்சத்தீவுகளின் நீர்மூழ்கி கண்ணாடி இழை இணைப்பு திட்டத்தை லட்சத்தீவின் கவரட்டியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் இணைய வேகத்தை அதிகரிக்க வழிவகுக்கும், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் மூலம் லட்சத்தீவு இணைக்கப்படும். விரைவான, நம்பகமான இணைய சேவைகள், தொலை மருத்துவம், மின் நிர்வாகம், கல்வி முன்முயற்சிகள், டிஜிட்டல் வங்கி, டிஜிட்டல் நாணய பயன்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு போன்றவற்றிற்கு இது பயனளிக்கும்.
இதற்கான நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 1,000 நாட்களுக்குள் விரைவான இணையத்தை உறுதி செய்வது குறித்து 2020-ம் ஆண்டில் வழங்கிய உத்தரவாதத்தை நினைவு கூர்ந்தார். "கொச்சி-லட்சத்தீவுகள் நீர்மூழ்கி கண்ணாடி இழை இணைப்பு திட்டம் இன்று மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, லட்சத்தீவு மக்களுக்கு 100 மடங்கு விரைவான இணைய வசதியை உறுதி செய்யும்" என்று அவர் கூறினார்.
லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை வசதி, பயண வசதி, எளிதாக தொழில் தொடங்குவதை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். "வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் லட்சத்தீவுகள் வலுவான பங்கு வகிக்கும்" என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகி திரு பிரபுல் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Input & Image courtesy:News