தமிழ்நாட்டு மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி.. மத்திய அமைச்சர்..
By : Bharathi Latha
மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரை, அண்ணாநகர் மற்றும் நொளம்பூரில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
மோடியின் உத்தரவாத வாகனம் மக்களின் எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி அரசுத் திட்டப் பலன்களை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தப் பயணம் மக்கள் பங்கேற்புடன் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார். 50 நாட்களில் 10 கோடிப் பேரை சென்றடைந்துள்ளது என்று கூறிய அவர், அரசு திட்டங்கள் குறித்து மக்களிடையே இந்தப் பயணம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். திட்டங்களின் பயன்கள் தகுதியான நபர்களின் வீடுகளுக்கே சென்றடைவதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஏழைகள் நல உணவுத் திட்டத்தில் 3.5 கோடி பேர் பயனடைவதாகவும், இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தில் இதுவரை 40 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தப் பயணம் புதிய இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவை நோக்கியது என்று அவர் தெரிவித்தார். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகிய 4 தரப்பினரின் முன்னேற்றத்தில் அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் மகளிர் சக்தியை கண்டு தாம் வியப்படைவதாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் மகளிர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதாக அவர் தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வங்கிக் கடன்கள் சாதாரண மக்களுக்கு எளிதில் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். தற்போது, அந்த நிலை மாறியுள்ளதாகவும், சாதாரண மக்கள் எளிதில் கடன் பெற முடிவதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் நலனில் அதிக அக்கறைக் கொண்டுள்ளதாகக் கூறிய பியூஷ் கோயல், மாநில மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Input & Image courtesy: News