புதிய எண்ணங்கள் மற்றும் வண்ணங்களுடன் பொதிகை தொலைக்காட்சியின் பெயர் மாற்றம்-பிரதமர் மோடியால் தொடக்கம்!
By : Karthiga
நாட்டின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதியின் கீழ் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி இயங்கி வருகிறது. தற்போது புதிய தொடர்கள் புதிய நிகழ்ச்சிகள் புதிய வடிவமைப்பில் செய்திகள் ஆகியவற்றுடன் டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புது பொலிவுடன் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்காக பிரச்சார் பாரதி சார்பில் ரூபாய் 39 கோடியே 71 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாக இருக்கும் 'டிடி தமிழ்' சேனலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்க உள்ளார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில் இதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.ஏற்கனவே பொதிகை என்ற பெயரில் ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்த இந்த தொலைக்காட்சியின் பாரம்பரியம் குன்றாமல் புதிய எண்ணங்கள் வண்ணங்கள் என்ற லட்சியத்துடன் புதுமையான நிகழ்ச்சிகளை டிடி தமிழில் அறிமுகம் செய்கிறது. அதன்படி நான்கு புதிய பொழுதுபோக்கு நெடுந்தொடர்கள், திரைப்படங்கள், திரைப்பட பாடல்கள் அடங்கிய ஒலியும் ஒளியும் நிகழ்சிகளும் இதில் அடங்கும்.
மேலும் காலை 8:00 மணி செய்திக்கு பிறகு காலை 9 ,10 மணிகளிலும் பிற்பகல் 12 ,2, 3 மணிகள் மற்றும் மாலை 4 மணிக்கு என தலா ஐந்து நிமிட விரைவு செய்திகள் புதிதாக இடம் பெற உள்ளன .அதுமட்டுமில்லாமல் உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தமிழ் கலாச்சாரத்தை எவ்வாறு பேணி வளர்க்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் வகையில் தமிழ் பாலம் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.
SOURCE :DAILY THANTHI