பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனை.. உலகப் பொருளாதார மன்றம் பாராட்டு..
By : Bharathi Latha
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் 2024 ஜனவரி 15 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில், "உலகம் ஒரு குடும்பம்" என்ற உணர்வில் இந்தியா பங்கேற்றது. இதில், இந்தியா சார்பில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அரசின் பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். உலக பொருளாதார மன்றம் மற்றும் இந்திய அரசின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடன் "உலகளாவிய நன்மைக்கான பாலின சமத்துவக் கூட்டமைப்பு" தொடங்கப்படுகிறது என்ற அறிவிப்பு இந்த மன்றக் கூட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த ஜி 20 தலைவர்களின் பிரகடனம் மற்றும் அவரது தொலைநோக்குப் பார்வையான மகளிர் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றில் இருந்து இந்த யோசனை உருவானது.
பெண்களின் சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைப்பது இந்த புதிய கூட்டமைப்பின் முதன்மையான நோக்கமாகும். இந்தக் கூட்டமைப்பின் தொடக்க அறிவிப்பின் போது, அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி பேசுகையில், மகளிர் மேம்பாட்டில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் குறித்து அவர் பேசினார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற கருப்பொருள்களில் பல்வேறு குழு விவாதங்கள் இந்தக் கூட்டத்தில் நடைபெற்றன.
"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனைக்கு உலகப் பொருளாதார மன்றம் பாராட்டுத் தெரிவித்தது. இந்த நிகழ்ச்சியில் பெண் தொழில்முனைவோரின் கைவினைப் பொருட்கள் மற்றும் இந்தியாவின் தேயிலை மற்றும் காபி வாரியத்தின் தயாரிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பஹ்ரைன் அமைச்சர் நூர் அலி அல்குலைஃப், நெதர்லாந்து துணைப் பிரதமரும் சமூக விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சருமான கரியன் வான் ஜெனிப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அமைச்சர்களுடனும் ஸ்மிருதி இரானி பேச்சு நடத்தினார்.
Input & Image courtesy: News