பழனி முருகன் கோவிலில் வேறு மதத்தினர் நுழைய தடை! உறுதிமொழி ஏற்று அனுமதிக்கலாம்!
By : Sushmitha
திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலதண்டாயுதபாணி கோவில் என்பது முருகனின் அறுபடை வீடுகளில் மிக முக்கியமான வீடு! நாள்தோறும் பாலதண்டாயுதபாணி முருகனை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து குவிவர், இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் இந்து மதத்தை தவிர்த்து பிற மதத்தைச் சார்ந்தவர்களும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் கோவிலுக்கு வருவது கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு வருத்தத்தை அளிப்பதாகவும், அதனால் அவர்கள் பழனி முருகன் கோவிலில் நுழைய அனுமதிக்க கூடாது பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற பதாகைகள் கோவில் வளாகத்தில் வைக்க வேண்டும் என பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஸ்ரீமதி முன்னிலையில் இன்று நடைபெற்ற நிலையில், இந்து மதத்தை சாராதவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பிற மதத்தை சேர்ந்தவர்களும் பழனி கோவிலின் கொடிமரத்தை தாண்டி கோவிலுக்குள் உள்ளே வந்து சாமியை பார்ப்பதற்கு தடை விதிப்பதாகவும் அதோடு இந்து மதம் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்ற பதாதைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார்.
அதோடு கோவிலின் நுழைவாயில் முன்பு வருகை பதிவு ஒன்றை வைக்க வேண்டும் என்றும் பிற மதத்தவர் கோவிலுக்குள் செல்ல விரும்பினால் அவர்கள் அந்த வருகை பதிவேட்டில் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட காரணத்தினால் கோவிலுக்குள் செல்ல விரும்புகிறேன் என்று உறுதிமொழி கொடுத்த பின்பு அவரை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டார்.
Source : The Hindu Tamil thisai