ஶ்ரீ ராமர் பிறக்க காரணமான ஊர்! ஆரணி குறித்து அண்ணாமலை! மனதின் குரல் நிகழ்ச்சியில் ஆரணி பட்டு!
By : Sushmitha
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் நேற்று ஆரணியில் நடைபெற்றது, இதனை அடுத்து அண்ணாமலை ஆரணி குறித்தும் ஆரணி பட்டு குறித்து பிரதமர் கூறியவற்றையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நேற்றைய மாலை என் மண் என் மக்கள் நடை பயணம், பகவான் ஸ்ரீராமரின் தந்தை தசரத மகாராஜா, குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்து வழிபட்ட பெருமைக்குரிய, புத்திர காமேட்டீஸ்வரர் அருள் புரியும் ஆரணி சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்களின் எழுச்சி ஆரவாரத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆரணியில் செய்த யாகத்தின் பலனாகப் பிறந்தவர் ஸ்ரீராமர். தமிழகத்திற்கும் ஸ்ரீராமசந்தர மூர்த்திக்கும் உள்ள தலையான பந்தத்தின் சாட்சியாக இந்த கோவில் இருக்கிறது.
ஆனால் சிலர், ராமனுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள். அயோத்தியில் இன்று ராமர் இருக்கிறார் என்றால், அதற்குக் காரணமே ஆரணிதான். ஆரணி, 70 ஆண்டு கால மிகப் பழமையான நகராட்சி. இத்தனை வரலாற்றுச் சிறப்பு மிக்க நகராட்சியில் அடிப்படை வசதிகள் ஏதும் முறையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆரணிப் பட்டு உலக அளவில் புகழ்பெற்றது. நமது மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றது. ஆரணியில் மட்டும் 50 ஆயிரம் நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர், தமது மனதின் குரல் நிகழ்ச்சியில், பல முறை, ஆரணியைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டு, நாடு முழுவதும் ஆரணியின் பெருமையைக் கொண்டு சேர்த்திருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளேரி கிராம பஞ்சாயத்து தலைவரிடம் காணொளி வாயிலாக பேசிய, நமது பாரத பிரதமர் மோடி அவர்கள், ஜல் ஜீவன் திட்டம் பெண்கள் குடத்தை எடுத்துக்கொண்டு வெகுதூரம் சென்று தண்ணீர் பிடிக்கும் அவஸ்தையை குறைத்துள்ளதால் நீங்கள் ஆரணி பட்டு பின்ன அதிக நேரம் ஒதுக்கமுடியும் என்று ஆரணி பட்டை மேற்கோள்காட்டி பேசினார் மோடி என்று குறிப்பிட்டுள்ளார்.