ஒரு எம்பி தனது கடமையில் விழிப்புடன் இருந்ததற்கான எடுத்துக்காட்டு மன்மோகன் சிங்! பிரதமர் புகழாரம்!
By : Sushmitha
கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதோடு இன்று ஓய்வு பெறும் எம்.பி. களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு மாநிலங்களவையில் நடைபெற்று உள்ளது. அந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர், முன்னாள் பிரதமர், ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகிய பதவிகளை கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த எம்பி மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பேசி உள்ளார்.
அதாவது,. இதே சபையில் டெல்லி அவசர சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற பொழுது அந்த வாக்கெடுப்பில் ஆட்சியில் இருக்கும் அரசு தான் வெற்றி பெறும் என்பது தெரிந்த விஷயம் இருப்பினும் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். மன்மோகன் சிங்கின் இந்த செயல் ஒரு எம்பி தனது கடமைகளில் விழிப்புடன் இருப்பதற்கான எடுத்துக்காட்டு! அதோடு அதில் மன்மோகன் சிங் யாரை ஆதரித்து வாக்களித்தார் என்பது விஷயம் அல்ல, அவரது செயல் மூலம் ஜனநாயகத்தை அவர் பலப்படுத்தினார் என்பதே எனக்கு புலப்பட்டது என்று பேசினார்.
மேலும், ஒரு தலைவராகவும் எதிர்க்கட்சியாகவும் மன்மோகன் சிங் அளித்த பங்களிப்பு மகத்தானது, மேலும் இந்த சபையையும் நாட்டையும் நீண்ட காலம் அவர் வழி நடத்திய விதமும் நமது ஜனநாயகம் பற்றிய ஒவ்வொரு விவாதத்தின் போது செய்த பங்களிப்பையும் குறித்து மன்மோகன் சிங் நினைவு கூறப்படுவார் என புகழ்ந்தார் பிரதமர்.
Source : junior vikatan