தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்! கண்டுகொள்ளாமல் இருக்கும் திமுக அரசு! அண்ணாமலை கண்டனம்!
By : Sushmitha
திமுக தனது தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டதை நிறைவேற்றக் கோரி கடந்த சில மாதங்களாக ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிற நிலையில் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர் இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசை கண்டித்து தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 1க்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை விட அடிப்படை ஊதியம் ரூ.3,170 குறைவாக வழங்கப்படுவதை எதிர்த்து, சம வேலைக்கு சம ஊதியம் கோரி பல ஆண்டுகளாக தமிழகப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்றிருந்த திமுக, தனது 2021 தேர்தல் வாக்குறுதி எண் 311ல், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 33 மாதங்கள் கடந்தும், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், ஆசிரியப் பெருமக்களின் தொடர் கோரிக்கைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம், கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுப்போம் என்று வாக்குறுதி அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதன்பிறகு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.
ஆசிரியப் பெருமக்களுக்கு திமுக இழைத்துள்ள நம்பிக்கை துரோகத்தைக் கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 10,000 ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக, ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என்றும், எழுத்தறிவிக்கும் ஆசிரியப் பெருமக்கள் வாழ்க்கையிலும், மாணவ மாணவியரின் கல்வியிலும் விளையாட வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.