Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்ட பெயரை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் நடக்கும் நூதன மோசடி : பொதுமக்களே உஷார், இது நிஜமல்ல!

சமூகவலைதளங்களில் போலி விளம்பரங்களை வெளியிட்டு பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்ட பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கிறது என்று டி.ஜி.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்ட பெயரை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் நடக்கும் நூதன மோசடி : பொதுமக்களே உஷார், இது நிஜமல்ல!
X

KarthigaBy : Karthiga

  |  26 Feb 2024 1:55 AM GMT

தமிழக சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி சஞ்சய் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-


பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் பெயரை பயன்படுத்தி லாபகரமான பரிசுகள் கிடைக்கும் என்ற வாக்குறுதியுடன் இந்த மோசடி செயல் அரங்கேறுவதாக புகார்கள் வந்துள்ளது. இந்த திட்டத்தில் ஐந்தாயிரம் பெறலாம் என்ற உறுதிமொழி மற்றும் பிரதமரின் படத்துடன் பயனர்களை கவர்ந்திருக்கும் வகையில் சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்கள் வெளியாகிறது. இந்த விளம்பரத்தை கிளிக் செய்தால் ஸ்க்ராட்ச் கார்டு கொண்ட ஒரு மோசடி இணையதளம் தோன்றும். அந்த கார்டை திறந்தால் ஒரு தொகை காண்பிக்கும்.


அதனை தொடும் போது சம்பந்தப்பட்டவர்களின் செல்போனில் உள்ள ஜிபே போன்ற யுபிஐ செயலிகளுக்கு செல்கிறது. இந்த தொகையை பெற வேண்டும் என்றால் யு.பி.ஐ பின் நம்பரை உள்ளிடும்படி கேட்கிறது. தொகை பெறுவதற்கு யு.பி.ஐ பின் நம்பரை உள்ளிட தேவையில்லை என்பதை அறியாமல் அவசர அவசரமாக யு.பி.ஐ பின் நம்பரை உள்ளிட்டால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும். எந்த ஒரு திட்டம் அல்லது சலுகை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்பு அதன் நம்பகத்தன்மையை எப்போதும் சரி பார்க்க வேண்டும் .


அதிகாரப்பூர்வ அரசாங்கத்திட்டங்கள் பொதுவாக பிரதயேக இணையதளங்கள் அல்லது தகவல்களை பரப்புவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சேனல்களை கொண்டிருக்கும் .நம்பத்தகாத சலுகைகளில் சந்தேகம் கொள்ள வேண்டும் .முறையான சரிபார்ப்பு அல்லது தகுதி அளவுகோல்கள் இல்லாமல் சட்டப்பூர்வமான திட்டங்கள் பெரிய தொகைகளை வழங்குவது அரிதாகும். கோரப்படாத செய்திகள் அல்லது விளம்பரங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் யு.பி.ஐ பின்கள் அல்லது வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம் .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News