வைரலாகும் வீடியோ... நிதி ஒதுக்கப்பட்டும் மக்களுக்கான வசதிகள் தமிழகத்தில் செய்யப்படவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு..!
By : Sushmitha
சமூக வலைதளத்தில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை அப்பகுதியில் சாலை வசதி இல்லாத காரணத்தினால் துணியால் டோலி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காணொளி ஒன்று பதியப்பட்டு வைரலாகி வந்தது. இதனை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்து, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிப் பெண் ஒருவரை, துணியால் டோலி கட்டி, மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் காணொளி ஒன்றை, சமூக வலைத்தளத்தில் காண நேர்ந்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
கடந்த 2000 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்த கிராம சாலைகள் திட்டம் மூலம், பல ஆயிரம் கோடி நிதி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டும், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் கூட சாலை வசதிகள் கிடைக்காமல் இருப்பதே, இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்குச் சான்று.
மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள், அந்தத் திட்டங்களை ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்திக் கொள்கிறாரே தவிர, அவற்றை நிறைவேற்றுவதில்லை.
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.