இந்தியாவில் தன் ஊழியர்களுக்காக வீடுகளை கட்டும் ஆப்பிள் நிறுவனம்! அடுத்த வருட இறுதியில் பணிகள் நிறைவு..!
By : Sushmitha
இந்திய நாட்டில் பல தொழில் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை தொடங்கி பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கி இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனம் தனது தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தேசிய அளவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிள் நிறுவனம் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது மேலும் கிட்டதட்ட 1.5 லட்சம் வேலை வாய்ப்புகளை நேரடியாக வழங்கியுள்ளது.
இந்த நிலையில் தன் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வேண்டிய வீடுகளை கட்டும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்! இதுவரை சீனா மற்றும் வியட்நாமில் இது போன்ற திட்டத்தை செயல்படுத்திய ஆப்பிள் இந்தியாவிலும் தற்போது செயல்பட்டு வருவதால் தனது ஊழியர்களுக்கு இந்தியாவிலும் வீடு கட்டுவதற்கான அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனங்களில் மிகப்பெரிய தொழிற்சாலையானது சென்னையிலும் உள்ளது, அதனால் தமிழகத்தில் சுமார் 58 ஆயிரம் வீடுகளை ஆப்பிள் நிறுவனம் தன் ஊழியர்களுக்காக அமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதில் தமிழகத்தின் சிப்காட், டாடா குழுமம், எஸ் பி ஆர் இந்தியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு, தனியார் தொழில் அதிபர்களின் பங்களிப்பும் உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அடுத்த வருட இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு முதலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வீடுகள் வழங்கப்பட உள்ளதாகவும் பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : The Hindu Tamil thisai