நாளைய சிறந்த எதிர்காலத்திற்கான தாங்குதிறன் கொண்ட உள்கட்டமைப்பு.. உணர்ச்சிபூர்வமாக பேசிய பிரதமர்..
By : Bharathi Latha
பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த 6-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி செய்தி மூலம் இன்று உரையாற்றினார். மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளையும் அன்புடன் வரவேற்பதாக கூறினார். அவர்களுடைய பங்கேற்பு பேரிடர் தாங்கு திறன் உள்கட்டமைப்பு குறித்த முக்கிய பிரச்சனைகளில் உலக நாடுகளின் விவாதங்கள் மற்றும் முடிவுகளை வலுப்படுத்தும் என்று கூறினார். பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு 2019-ம் ஆண்டு தொடங்கப் பட்டதிலிருந்து, அது சிறப்பான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக கூறிய பிரதமர், இது தற்போது 39 நாடுகள் மற்றும் 7 அமைப்புகளுடன் உலகளாவிய கூட்டமைப்பாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். "இது எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த அறிகுறி" என்றும் அவர் மேலும் கூறினார்.
இயற்கைப் பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், அதனால் ஏற்படும் சேதங்கள் பொதுவாக டாலர்களில் மதிப்பிடப்படுவதையும் குறிப்பிட்ட பிரதமர், மக்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீதான இயற்கைப் பேரிடர்களின் உண்மையான தாக்கம் எண்ணிக்கையில் இல்லை என்று தெரிவித்தார். இயற்கைப் பேரிடர்கள் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து குறிப்பிட்ட மோடி, நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுவதன் மூலம், ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளை இழக்கச் செய்வதாகவும், இயற்கைப் பேரிடர்கள், தண்ணீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை சீர்குலைக்கச் செய்து மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் கூறினார். மின் உற்பத்தி நிறுவனங்களை பாதிக்கும் இயற்கைப் பேரிடர்கள் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"நாளைய சிறந்த எதிர்காலத்திற்கான தாங்குதிறன் கொண்ட உள்கட்டமைப்பில் நாம் இன்று அவசியம் முதலீடு செய்ய வேண்டும்" என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். பேரழிவுக்குப் பிந்தைய மறுகட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அதே வேளையில், புதிய உள்கட்டமைப்பு உருவாக்கத்தில் தாங்குதிறன் காரணியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பேரிடர் தாக்கிய பின்னர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப் பட்டவுடன், உள்கட்டமைப்பில் தாங்குதிறனை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
Input & Image courtesy: News