மக்கள் மீது சுமையை ஏற்றாமல் ஆக்கபூர்வமான முறையில் அரசின் வருவாயை பெருக்குங்கள் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
By : Sushmitha
சமீபத்தில் முத்திரை கட்டணம் தமிழக முழுவதும் பல மடங்கு உயர்த்தி அரசாணை வெளியானது. அதன்படி ரூ. 100 கட்டணமாக இருந்த தத்து ஆவணங்களுக்கு 1000 ரூபாய் கட்டணம் ஆகவும், ரூ. 20 கட்டணமாக இருந்த ஒப்பந்த ஆவணங்களுக்கு 200 ரூபாய் கட்டணமாகவும், ரூ. 50 கட்டணமாக இருந்த ரத்து பத்திரங்களுக்கு 1000 ரூபாய் கட்டணமாகவும், ரூ. 50 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பொதுமக்களை பாதிக்கும் முத்திரைக் கட்டணம் பன்மடங்கு உயர்வுக்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பக்கத்தில், பத்திரப்பதிவுத்துறையின் மூலம் நடைபெறும் பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம், உடன்படிக்கை என அனைத்துவிதமான செயல்பாடுகளுக்குமான முத்திரைக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியிருக்கும் தமிழக அரசின் மக்கள் விரோதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பால்விலை உயர்வில் தொடங்கி மின்சாரக் கட்டணம், சொத்துவரி, சாலைவரி, குடிநீர் வரி மற்றும் நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பை நேரடியாகவும், மறைமுகமாவும் உயர்த்திய திமுக அரசு, தற்போது முத்திரைக் கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தியிருப்பது தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் நிதி மேலாண்மையை முறைப்படுத்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், வரி மற்றும் கட்டண உயர்வு எனும் பெயரில் ஏழை, எளிய மக்களின் மீது கூடுதல் சுமைகளை ஏற்றி, அதன் மூலமாக மட்டுமே வருவாயைப் பெருக்க முயற்சிப்பது திமுக அரசின் நிர்வாகத் திறனற்றத் தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் முத்திரைக் கட்டணம் பன்மடங்கு உயர்வுக்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மக்கள் மீது சுமையை ஏற்றாமல் அரசின் வருவாயை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.