Kathir News
Begin typing your search above and press return to search.

சூதாட்ட நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்க துடிக்கிறதோ இந்த தமிழக அரசு? - அன்புமணி ராமதாஸ்...

சூதாட்ட நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்க துடிக்கிறதோ இந்த தமிழக அரசு? - அன்புமணி ராமதாஸ்...
X

SushmithaBy : Sushmitha

  |  18 May 2024 1:37 PM IST

தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் இறப்புகள் அதிகரித்து வருவதால் தமிழக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ராமையா புகலா அவரது சொந்தப் பணம் பல லட்சத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அந்தப் பணத்தை மீட்க வேண்டும் என்ற வேகத்தில் அவருடன் பயிலும் மாணவர்களிடம் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி அதையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

கொடுத்த பணத்தை மாணவர்கள் மீண்டும் கேட்கத் தொடங்கிய போது தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தாம் எந்த அளவுக்கு அடிமையாகியுள்ளோம்; எவ்வளவு பணத்தை இழந்துள்ளோம் என்பது ராமையாவுக்கு தெரியவந்துள்ளது. ஆனாலும், ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து விடுபட முடியாததாலும், வாங்கிய கடனை அடைக்க முடியாததாலும் அவர் தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களில் பலரின் வாழ்க்கை இவ்வாறு தான் தொலைகிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஒன்பதாவது உயிர் ராமையா ஆவார்.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்தே அத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை தொடங்கி விட்ட நிலையில் அடுத்த இரு மாதங்களுக்கு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.

இதை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டிய தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கத் துடிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஆன்லைன் சூதாட்ட அரக்கனின் பிடியிலிருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

Source : Asianet news Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News