சந்தி சிரிக்கும் போலி திராவிட மாடல் அரசு! இதுதான் சமூக நீதி ஆட்சியா? முதல்வருக்கு எல்.முருகன் கேள்வி!
By : Sushmitha
ஈரோடு மாவட்டம் பெரியவலசு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சொர்ணா சாலையில் நடந்து சென்ற பொழுது இருசக்கர வாகனம் மோதி காயமடைந்துள்ளார். இதனால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரது மகள் வளர்மதி ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்பொழுது மருத்துவமனை ஊழியர்கள் மூதாட்டி சொர்ணாவிற்கு ஸ்ட்ரெச்சர் வழங்காமல் அலைக்கழித்துள்ளனர். இதனால் ஸ்ட்ரெச்சருக்காக காத்திருக்காமல் தனது தாயை மகள் வளர்மதி தூக்கி சென்றுள்ளார். அப்பொழுது அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை அவரது மகள் தூக்கி செல்வதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலையதளத்தில் வைரலானதை அடுத்து பலரும் பல கண்டனங்களை இதற்கு முன் வைத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய துணை அமைச்சர் எல்.முருகன் இதற்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதாவது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "சந்தி சிரிக்கின்ற ‘போலி திராவிட மாடல்’ அரசு..! அன்றாடம் தங்களுடைய குடும்பத்தை காக்க அயராது உழைக்கும் பாமர மக்களுக்கு, அரசு மருத்துவமனைகளே தெய்வங்களாக இருந்து வருகின்றன. அப்படி இருக்கையில், இப்படியாக பாமர மக்களுக்கு தேவைப்படுகிற அடிப்படை வசதியை கூட ஏற்படுத்திக் கொடுக்க முடியாத ‘போலி சமூக நீதி’ அரசாங்கத்தை தான், நாட்டின் முதன்மை ஆட்சி என்று கூறிக் கொள்கிறீர்களா, முதல்வர் ஸ்டாலின் அவர்களே..?" என்று பதிவிட்டுள்ளார்.
Source : Asianet news Tamil