தீவிரமடையும் ராமலிங்கம் கொலை விசாரணை... மயிலாடுதுறையில் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ!!
By : Sushmitha
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகரான ராமலிங்கம், திருபுவனம் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஹிந்துக்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து வந்தவர். இதனால் கடந்த 2019-ம் பயங்கரவாதிகள் புனித போர் என்ற பெயரில் ராமலிங்கத்தை கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கை கையில் எடுத்த தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தீவிரப்படுத்தியதோடு எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் (பி.எஃப்.ஐ) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு அதில் 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இந்த கொலைக்கு முக்கிய மூளையாக முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹாதீன், சாகுல் ஹமீது மற்றும் நபீல் ஹுசைன் ஆகியோர் செயல்பட்டுள்ளது, தேசிய பிறனாய்வு அதிகாரிகளுக்கு விசாரணையில் தெரிய வந்தது. இதனால் குற்றவாளிகளின் ஐந்து பேரின் பெயர் மற்றும் படம் உள்ளிட்ட விபரங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் முக்கிய இடங்களில் சுவரொட்டிகளில் ஒட்டியதோடு வாட்ஸ் அப்பிலும் பரப்பினர்கள்.
அதுமட்டுமின்றி இந்த குற்றவாளிகள் குறித்த தகவல்களை கூறினால் 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படுவதோடு, தகவல் கூறுபவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியானது. இதனால் மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்து குற்றவாளிகள் குறித்த தகவல்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. மேலும் மயிலாடுதுறை மற்றும் திருப்புவனத்தில் கிடைத்த ரகசிய தகவல்களின்படி, அப்பகுதிகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
அதோடு, இந்த பகுதிகளில் குற்றவாளிகள் பதுங்கி இருந்தது குறித்த நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் குற்றவாளிகள் வந்து சென்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக என்.ஐ.ஏ தரப்பில் கூறப்படுகிறது.