பிரதமர் அலுவலகம் இனி மக்களின் அலுவலகம்.. வெளிப்படையாக பேசிய பிரதமர் மோடி..
By : Bharathi Latha
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, நேற்று முன்தினம் தன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். PMO எனப்படும் பிரதமர் அலுவலகத்துக்கு வந்த அவரை, அங்குள்ள அதிகாரிகள், ஊழியர்கள் வரவேற்றனர். அப்போது அவர்கள் இடையே மோடி பேசும் போது, நீண்ட காலமாக, பிரதமர் அலுவலகம் என்பது, நாட்டின் உச்சபட்ச அதிகார மையம் என்ற கருத்து இருந்தது. நான் அதிகாரத்தை விரும்புபவன் அல்ல. அதிகாரத்தை பெற வேண்டும் என்று விரும்புபவனும் அல்ல. அது என் விருப்பமும், வழிமுறையும் அல்ல.
அதனால் தான், 10 ஆண்டுகளுக்கு முன், இந்த கண்ணோட்டத்தை மாற்றும் முயற்சியை துவக்கினேன். இனி பிரதமரின் அலுவலகம் பிரதமரின் அலுவலகம் அல்ல, அது மக்களின் அலுவலகம். நான் 140 கோடி மக்களின் நலனுக்காக என்னை அர்ப்பணித்து உள்ளேன். என் ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கானது. நாட்டை 2047ல் வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்ற நோக்கத்தோடு உள்ளோம்.
அதற்கு நான் 24 மணி நேரமும் உழைக்கத் தயாராக உள்ளேன். என் இதயத்தில், 140 கோடி பேரைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர்களை நான் நம் நாட்டு மக்களாக பார்க்கவில்லை. கடவுளின் உருவமாக பார்க்கிறேன். அதனால்தான், எந்த முடிவை இந்த அரசு எடுத்தாலும், அதை, 140 கோடி பேரை வழி படுவதாகவே பார்க்கிறேன். ஒரு வேலையை செய்து முடிப்பது என்பது நல்ல விஷயம்தான். ஆனால், அதில் நம் மதிப்பு கூட்டல் இருக்க வேண்டும். இதைத் தான், உங்களிடம் நான் எதிர் பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல் பட்டால், எதையும் நம்மால் அடைய முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: News