கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய எஸ்.ஜி.சூர்யா! சொன்னதை செய்து காட்டிய பாஜக!
By : Sushmitha
கடந்த 18ஆம் தேதி கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து 150 க்கும் மேற்பட்டோர் வாந்தி, கண் எரிச்சல், தலைசுற்றல் போன்ற உடல் உபாதை காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம், முண்டியம்பாக்கம் மற்றும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இப்படி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்போது இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இப்படி ஒரு கோர விபத்து ஏற்பட்டதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு கள்ளக்குறிச்சி விரைந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மத்திய அரசின் திட்டங்கள் விரைவாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.
அதன்படியே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் படி பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை விரைந்து முடித்து, உயிரிழந்த 29 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை எஸ்.ஜி.சூர்யா வழங்கியுள்ளார்.