Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் இனிமேல் இதுதான் விதி - மத்திய அரசின் புதிய சட்டம்!

தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி அபராதம் விதிக்கும் மத்திய அரசின் புதிய சட்டம் அமலுக்கு வந்தது.

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் இனிமேல் இதுதான் விதி - மத்திய அரசின் புதிய சட்டம்!
X

KarthigaBy : Karthiga

  |  23 Jun 2024 10:22 AM GMT

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுகள் தற்போது வெட்ட வெளிச்சமாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைகளில் வினாத்தாள் கசிந்தது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் பலர் கைது ஆனார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. கருணை மதிப்பெண்கள் பெற்ற சுமார் 1500 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதே போல் கடந்த 18-ஆம் தேதி நடந்த பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கான நெட் தேர்விலும் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது .இதனால் அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மறுநாளே அறிவிக்கப்பட்டது .அதேபோல் மற்றொரு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற தேர்வு முறைகேடுகளை தடுக்க வகை செய்யும் புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது .இந்த சட்டம் அரசு தேர்வுகள் முறைகேடுகள் தடுப்புச் சட்டம் 2024 என அழைக்கப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது .

இந்த சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன யு.பி.எஸ்.சி , பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி, ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம், தேசிய தேர்வு முகமை வங்கி தேர்வு உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகள் நடத்தும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வகை செய்யும் வகையில் இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி வினாத்தாள்களை கசிய விடுவது, தேர்வின் போது தகவல் தொடர்புகள் மூலம் தேர்வர்களுக்கு உதவுவது, கம்ப்யூட்டர் அமைப்புகளை சீர்குலைப்பது ,ஆல்மாறாட்டம் செய்வது, போலி ஆவணங்களை உருவாக்குவது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது இந்த சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய முடியும்.

மேலும் அனுமதி இல்லாத நபர்கள் தேர்வு மையத்துக்குள் நுழைவதையும் இந்த சட்டம் தடுக்கிறது .இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூபாய் ஒரு கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். தவறுகள் நடந்தும் அதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தேர்வை நடத்துபவர்களுக்கு ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.


SOURCE :NEWSPAPER

Next Story
கதிர் தொகுப்பு
Trending News