மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் மற்றும் முடிவுகள்!
மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு மாநில நிதிமந்திரிகள் ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.
By : Karthiga
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.இதன் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதில் புதிய எம்.பிக்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் 2024 -25 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே முந்திய அரசு தாக்கல் செய்திருந்தது. எனவே முழுமையான பட்ஜெட் அடுத்த மாதம் பிற்பகுதியில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று மாநில நிதி மந்திரிகளின் ஆலோசனை கூட்டத்தை அவர் நடத்தினார். அவரது தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர். இதில் மத்திய பட்ஜெட்டுக்காக பல்வேறு பரிந்துரைகளை மாநிலங்களின் நிதி மந்திரிகள் வழங்கினார். மேலும் தங்கள் மாநிலங்களில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
இதைப்போல மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவி திட்டத்தை பல மாநிலங்கள் பாராட்டின.அத்துடன் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர். இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் சரியான நேரத்தில் வரி பகிர்வு, நிதி கமிஷன் மானியம், ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகை மூலம் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவிகளை சுட்டிக்காட்டினார். மேலும் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக மாநிலங்களுக்கு 50 ஆண்டு வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் நிதிமந்திரியும் துணை முதல் மந்திரிமான தியாகுமாரி பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டோம் என்று தெரிவித்தார் .
இதே போல கர்நாடகாவில் நடந்து வரும் மேல் பத்ரா நீர்திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்து அதற்காக அறிவிக்கப்பட்ட ரூபாய் 5300 கோடியை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக மாநில வருவாய் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார். மேலும் வீட்டு வசதி திட்டங்களில் மத்திய அரசின் பங்கை கிராமப்புறங்களில் ரூபாய் 3 லட்சம் ஆகவும் நகர்புறங்களில் 5 லட்சம் ஆகவும் உயர்த்துமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
SOURCE:Newspaper