Kathir News
Begin typing your search above and press return to search.

மதுராந்தகம் அருகே எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு!

மதுராந்தகம் அடுத்த தேன் பாக்கம் சிவன் கோவில் அருகே எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் அருகே எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு!

KarthigaBy : Karthiga

  |  24 Jun 2024 3:32 PM GMT

மதுராந்தகம் அடுத்த தேன்பாக்கம் சிவன் கோவில் அருகே உடைந்த நிலையில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலை கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், தேன்பாக்கம் சிவன் கோயிலுக்கு அருகில் உடைந்த நிலையில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலை இருப்பதை அறிந்த மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரா.ரமேஷ், கல்லூரி உதவி பேராசிரியர் சி.சந்திரசேகர் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

உடைந்த நிலையில் காணப்படும் இந்த கொற்றவை சிலை புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டது .நீண்ட பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது .கொற்றவை உருவம் கலையம்சத்துடன் காணப்படுகிறது .நீள்வட்ட முகம், சிற்பத்தில் உள்ள கண்கள் மற்றும் கலையான முகம் சிதைந்துள்ளது. வளைந்த மெல்லிய இடை, எட்டு கரங்களுடன் கொற்றவை சிற்பம் சுமார் இரண்டரை அடி அகலமுடையதாக மண்ணில் புதைந்துள்ளது. சிலை செதுக்கப்பட்ட கல் உடைந்து காணப்படுவதால் முழுமையான உருவத்தை பார்க்க முடியவில்லை.

கொற்றவையின் வலது காலை வளைத்து நிறுத்தியும் , இடது காலை சற்று மடித்த நிலையில் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையில் மூன்று அடுக்குகளில் உயர்ந்த மணிமகுடம் , பனை ஓலையில் காதணிகள் வடிவமைக்கப்பட்டிருப்பது இந்த கொற்றவை சிலையின் தனி சிறப்பாகும். புத்திர குண்டலங்கள், மார்பு கச்சை, இடைக்கச்சை, பாகு வளையங்கள், உள்ளிட்ட அணிகலன்கள் உடன் எளிமையான அழகுடன் செதுக்கப்பட்டுள்ளது .எட்டு கைகளில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், அம்பு வில் என படைக்கலங்கள் கொண்டு முன் வலது கையை தனது தொடை பகுதியிலும் இடது கையை இடையில் வைத்துள்ளது போலவும் வடிவமைக்கப்பட்டடுள்ளது.

கொற்றவை பாலை நிலத்தின் தெய்வம். தமிழ் மக்களின் தாய் தெய்வம் கொற்றவை. பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. குழந்தைகளை காக்கும் தெய்வம், பகையை கொள்ளும் தெய்வமாகவும் கொற்றவை கருதப்படுகிறது .கொற்றவை தெய்வமானது வடவாயிற் செல்வி, காளி, நீதி, சூலி, அமரி, சமரி, கானமலர் செல்வி, காடுகிழாள், பாய்களப்பாவை, பழயோல் என மக்களால் அழைக்கப்பட்டுள்ளது தமிழ் இலக்கிய சான்றுகளில் காண முடியும். தாய் வழிபாட்டின் உச்ச வடிவமாக கொற்றவை வழிபாடு உள்ளது.

பழங்காலம் முதல் வீரத்தின் அடையாளமாகவும் வெற்றியை குறிக்கும் தெய்வமாகவும் கொற்றவை போற்றப்பட்டதால் போருக்கு செல்லும் வீரர்கள் கொற்றவைக்கு ரத்த பலி கொடுத்து வழிபாடு செய்துவிட்டு செல்வர். தனது தலையை அறுத்து பலி கொடுப்பதாகவும் வேண்டிக் கொள்வர். போரில் வெற்றி பெற்றால் கொற்றவைக்கு காணிக்கையாக தம் தலையை தாமே அறுத்து பலி கொடுத்த 'தலைபலி நடு கற்கள்' தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் காணப்படுகின்றன. தமிழ் மரபு வரலாற்றில் கொற்றவைக்கு தனி இடம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News