கள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய மனித உரிமைகள் ஆணையம்!
கள்ளக்குறிச்சி சோக சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
By : Karthiga
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் காவல் துறை டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 59 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் தாமாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு : கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகள் உண்மையெனில் அது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வுரிமை குறித்து தீவிர பிரச்சனையை எழுப்புகிறது. கள்ளச்சாராய உற்பத்தி, இருப்பு, போக்குவரத்து, விற்பனை ஆகியவற்றை தவிர்க்க மாநில அரசுக்கு பிரத்தியேக அதிகாரம் உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்தில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலர் காவல்துறை டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் நிலவரம், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அளித்த இழப்பீடு, இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து அந்த அறிக்கை மூலம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிந்து கொள்ள விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
SOURCE :Newspaper