மோடியின் அடுத்த கட்ட திட்டம் - வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் இதர முன்னேற்றங்களுக்கு காய் நகர்த்தும் மோடி அரசு!
பிரதமர் மோடி அடுத்த மாதம் ரஷ்யா செல்கிறார். ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
By : Karthiga
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பிறகு கடந்த 13-ஆம் தேதி இத்தாலி சென்றார். ஜி 7 அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொண்டார். இந்நிலையில் அவர் மீண்டும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். அடுத்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவுக்கு செல்கிறார். இத்தகவலை ரஷ்ய அதிபர் புதினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யுரி உஷாகோவ் தெரிவித்தார்.
தேதி முடிவானதும் இரு நாடுகளும் கூட்டாக அதை அறிவிக்கும் என்று யுரி உஷாகோவ் தெரிவித்தார். துல்லியமான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தபோது பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வரவேண்டும் என்று புதின் அழைப்பு விடுத்து இருந்தார்.
அதை ஏற்று பிரதமர் மோடி அங்கு செல்கிறார் .அவர் இரண்டு நாட்கள் பயணமாக செல்வதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பயணத் திட்டத்தில் வேறு நாடுகள் சேர்க்கப்படாததால் இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. பயணத்தின் போது புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார். இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய சர்வதேச பிரச்சனைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிகிறது. உக்ரைன் போர் பிரச்சனையில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவுடன் இந்தியா நல்லுறவை கடைபிடித்து வருகிறது.
கடந்த ஆண்டு இரு நாடுகளின் வர்த்தகம் 65 பில்லியன் டாலரை எட்டி சாதனை படைத்தது .ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் , நிலக்கரி ஆகியவற்றை வாங்கியதுதான் வர்த்தகம் அதிகரிக்க காரணமாகும். இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதின் வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் ரஷ்யாவின் கசன் நகரில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் புதினும் பிரதமர் மோடியும் சந்திக்க உள்ளனர்.
SOURCE : NEWS