அரசு பேருந்தில் பயணிக்க புறக்கணிக்கப்படும் துப்புரவு பணியாளர்கள்! ... வெடித்த திடீர் போராட்டம்!
By : Sushmitha
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு துப்புரவு பணிக்காக செல்லும் பெண்களை ஏற்றாமல் அரசு பேருந்து சென்றதால் துப்புரவு பணியாளர்கள் பேருந்து நிலையத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என ஏராளமான பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் பலர் தஞ்சாவூர் மற்றும் அதன் அண்டை பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் குறிப்பாக துப்புரவு பணியாளர்கள் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரிக்கு, அதன் வழியாக செல்லும் அரசு டவுன் பேருந்துகள் மூலம் தினமும் வேலைக்கு செல்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் இந்த தொழிலாளர்கள் ஷிப்ட்களின் அடிப்படையில் செயல்படுவதால் அவர்களின் பணி அட்டவணைக்கு ஏற்ப தங்களது பயணத்தை மாற்றி திட்டமிட்டு கொள்கிறார்கள். இதனால் தினமும் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மருத்துவ கல்லூரிக்கு செல்லும் காலை பேருந்தை பிடிப்பதற்காக காலை 6:30 மணிக்கே பழைய பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சமீபகாலமாகவே டவுன் பஸ்ஸில் ஏற துப்புரவு பணியாளர்கள் முற்பட்டும் கண்டக்டர் ஏதோ காரணங்களை கூறி அடுத்த பஸ்ஸிற்காக காத்திருக்கும் படி கூறியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பேருந்து நிலைய நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டதோடு, பேருந்துகள் புறப்படுவதில் இடையூறும் ஏற்பட்டது. மேலும் இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளரிடம் கேட்டபொழுது, பெண்களுக்கு இலவச பயணத்திற்காக பேருந்துகள் ஒதுக்கப்பட்ட போதிலும், அதில் பயணிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இலவச கட்டண பிரச்சனையில் நடத்துனர்கள் தங்களை அவமரியாதையாக நடத்தியதாகவும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்த பிறகு துப்புரவு பணியாளர்கள் தங்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
ஏற்கனவே திமுக அமைச்சர்கள் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்திற்கு ஓசி டிக்கெட் என பெண்களை மரியாதை குறைவாக பேசி வருகின்றனர். மேலும் அரசு பேருந்துகளின் நிலைமையும் கவலைக்குரியதாக, பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இந்த நிலையில் பெண் துப்புரவு பணியாளர்களை புறக்கணித்து அரசு பேருந்து சென்றதால் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது திமுகவிற்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Source : The Commune