Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கை குலக்கல்வி என்றால் திமுக அரசின் கல்விக்கொள்கை சொல்லிக்கொடுப்பது என்ன?

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய தேசிய கல்விக் கொள்கையை குலக்கல்வி என்று விமர்சனம் செய்து வரும் திமுக விற்கு பதிலடி கொடுத்து அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார்.

பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கை குலக்கல்வி என்றால் திமுக அரசின் கல்விக்கொள்கை சொல்லிக்கொடுப்பது என்ன?
X

KarthigaBy : Karthiga

  |  4 July 2024 12:55 PM GMT

இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை NEP என குறிப்பிடப்படுகிறது. இது 1986 இல் உருவாக்கப்பட்ட பின்னர் 1992 இல் மாற்றப்பட்டது. மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் தனது தேர்தல் அறிக்கையில் கல்வித் துறையில் மாற்றங்களைக் கொண்டுவர புதிய கல்விக் கொள்கை அல்லது NEP ஐ உருவாக்குவதாக உறுதியளித்தது. ஜூலை 2020 இல், இந்திய கல்வி முறையில் நவீன சீர்திருத்தங்களை பள்ளி முதல் கல்லூரி நிலை வரை கொண்டு வரும் நோக்கத்துடன் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தக் கொள்கை இந்தியாவை 'உலகளாவிய அறிவு வல்லரசு' ஆக்குவதற்கான உறுதியில் நிற்கிறது. இது தவிர, 2020 இல் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகம் என மறுபெயரிடப்பட்டது. 2023-2024 இந்த கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில், 13 பேர் கொண்ட குழு 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுக ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகிறது. தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்பதை கூறிக் கொண்டு வந்தது. இது சம்பந்தமாக சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:-

மோடியின் புதிய தேசிய கல்விக் கொள்கையை குலக்கல்வி என்று கூறும் திமுக அரசு கடலோர மீனவ சமுதாய மாணவர்களுக்கு கடல் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கடல் சார்ந்த அனைத்து யுக்திகளும் கற்றுத் தரப்படும் என்றும் கூறி வருகிறது. அது நல்ல விஷயம் தான். ஆனால் இதற்குப் பெயர் குலக்கல்வி அல்லாமல் வேறென்ன? மோடியின் தேசிய கல்விக் கொள்கையை குலக்கல்வி என்று விமர்சிக்கும் தி.மு.க.விற்கு இதுவும் ஒரு வகையான குலக்கல்வி தான் என்பது புலப்படவில்லையா? ஆரம்பம் முதலிலேயே மும்மொழிக் கொள்கையை திமுக அரசு ஏற்க மறுத்து வருகிறது.

மும்மொழிக் கொள்கை என்பது தமிழ், ஆங்கிலம், மூன்றாவது மொழியாக இந்தி அல்லது எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று தான் மத்திய அரசு விதித்திருந்தது. மத்திய அரசு இந்தியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு புரிந்துரைக்க முயற்சித்த போதெல்லாம் திமுக இந்தி திணிப்பு ,இந்தி திணிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி எதிர்த்து வந்தது. இந்தியை வேண்டாம் என்று புறக்கணிக்கும் திமுக அரசு உருது பள்ளிகள் ஆரம்பிக்க வேண்டும், மாணவர்களுக்கு உருது கற்று தர வேண்டும், உருது புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறது . இதற்கு பெயர் உருது திணிப்பு இல்லையா?

புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பது திமுக அரசுக்கு நன்கு தெரியும். புதிய தேசிய கல்விக் கொள்கையின் பல பக்கங்களில் இருக்கும் அதே விஷயங்களைத் தான் மாநில கல்விக் கொள்கையில் திமுகவும் புகுத்தி இருக்கிறது. பக்க எண்ணிக்கை தான் வேறாக இருக்கிறதே தவிர கருத்துக்கள் அதேதான் .ஆனால் முழு மனதோடு மோடி அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மோடி அரசின் நல்ல திட்டங்களை முழுமையாக தமிழகத்தில் செயல்படுத்தாமல் எதிர்த்து வருகிறது திமுக. இவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறியுள்ளார்.


SOURCE :News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News