இந்தியாவில் மூன்று கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும்- பிரதமர் மோடி!
பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அப்போது ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ரஷ்ய வாழ் இந்தியர்களிடையே பேசிய உரை பற்றி காண்போம்.
By : Karthiga
பிரதமர் மோடி ரஷ்யா , ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். நேற்று அவர் முதலில் ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார். பிற்பகலில் ரஷ்யா போய் சேர்ந்தார். மாஸ்கோ விமான நிலையத்தில் அவரை ரஷ்யாவின் முதன்மை துணை பிரதமர் டெனிஸ் மண்டுரோவ் வரவேற்றார் .அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது .இந்திய வம்சாவளியினரும் இந்திய தேசியக் கொடியுடன் வந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசுமுறைப் பயணமாக ரஷ்யா வந்ததில் பிரதமர் மோடி இன்று மாஸ்கோவில் ரஷ்யாவில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :-
ரஷ்ய வாழ் இந்தியர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. 140 கோடி மக்களின் அன்பைக் கொண்டு வந்துள்ளேன். மூன்று மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உறுதியுடன் மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளேன். இந்தியாவை மூன்றாவது பொருளாதார நாடாக மாற்றுவதே எனது இலக்கு. இந்தியாவில் மூன்று கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்பட உள்ளது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் நாடாக இந்தியா திகழும்.
இந்தியா மாற்றத்தை நோக்கி செல்வதாக அனைவரும் கூறுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு உலகம் வியப்படைந்துள்ளது. இந்தியாவில் லட்சக்கணக்கான ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனையில் சாதனை படைத்துள்ளது இந்தியா. கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கிலோமீட்டர் ரயில் பாதை மின்சார வழித்தடமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
SOURCE :Newspaper