Kathir News
Begin typing your search above and press return to search.

எல்லையோர கிராமங்களின் வளர்ச்சியில் துடிப்போடு செயல்பட்டு வரும் மத்திய அரசு!

நாட்டின் எல்லையோர கிராமங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு உறுதியுடன் செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

எல்லையோர கிராமங்களின் வளர்ச்சியில் துடிப்போடு செயல்பட்டு வரும் மத்திய அரசு!
X

KarthigaBy : Karthiga

  |  15 July 2024 11:09 AM GMT

புதுடெல்லியில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமித்ஷா ஆய்வு செய்தார். கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எல்லையோர கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதியோடு செயல்படுகிறது. எல்லையோர கிராமங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்வதை தடுக்க உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டியது மிகவும் அவசியம்.

எல்லைப் பகுதி கிராமங்களைச் சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய ஆயுத காவல் படைகளும் ராணுவமும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் உள்ளூர் விவசாய பொருட்களையும் கைவினைப் பொருள்களையும் ஊக்குவிக்க வேண்டும். ராணுவமும் ஆயுதப்படைகளும் அருகில் உள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில் சுகாதார வசதிகள் தொடர்ந்து கிடைக்க உதவி செய்ய வேண்டும். இப்பகுதிகளில் சூரிய சக்தி காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் எல்லையோர கிராமங்களில் பிரச்சனைகளை நன்கு புரிந்து கொள்ள மூத்த அமைச்சர்களும் அதிகாரிகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தொடர்வது மிகவும் முக்கியம். எல்லையோர கிராமங்களில் இதுவரை 6000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 4000 நிகழ்ச்சிகள் சேவை வழங்கல் தொடர்பானவை. மற்றவை விழிப்புணர்வு முகாம்கள். இந்த கிராமங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க 600-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், இந்தோ - திபெத் எல்லை காவல் படை இயக்குனர், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் 136 எல்லையோர கிராமங்களுக்கு 2,420 கோடி ரூபாய் செலவில் 113 சாலை திட்டங்கள் மூலம் போக்குவரத்து இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் 4-ஜி இணைப்பு விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 2024-க்குள் 'துடிப்பான கிராமங்கள்' திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 4-ஜி இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிதி உள்ளடக்கத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அஞ்சலக வங்கி சேவை வசதிகளும் இக்கிராமங்களில் செய்து தரப்படுகின்றன. இந்த துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் வளர்ச்சியை அதிகரிக்கவும் சுற்றுலாவை மேம்படுத்தவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியில் சுற்றுலா அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்த முக்கியமான இலட்சிய திட்டம் பிப்ரவரி 14 ,2023 அன்று ரூபாய் 4,800 கோடி ஒதுக்கத்துடன் தொடங்கப்பட்டது.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News