பிரதமர் மோடியின் அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! குவிந்து கிடக்கும் பலன்கள்...
By : Sushmitha
நாட்டு மக்களின் சேமிப்பையும் குறிப்பாக விவசாயிகள் மற்றும் பெண்களின் பங்களிப்பை சேமிப்பில் அதிகப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி பல அஞ்சலக சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவை என்னன்ன? எவ்வளவு பயன் உடையது என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்:
இது பெண்களின் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டம். இந்த திட்டம் இரண்டு ஆண்டு கால அளவுடையது. இந்த திட்டத்தில் ஆண்டிற்கு 7.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம். உதாரணமாக இந்த திட்டத்தில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகளில் முடிவில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 22 ரூபாய் கிடைக்கும் அதுவே இரண்டு லட்சமாக இருந்தால் இரண்டு ஆண்டுகளில் முடிவில் 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்:
செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கான ஒரு சிறப்பான திட்டம். இந்த திட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பை தொடங்கலாம். இந்த திட்டத்தின் இணைய உங்கள் பெண் குழந்தையின் வயதானது பத்து வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். மேலும் இதில் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வரை சேமிக்கலாம். 21 ஆண்டுகால அளவு கொண்ட இந்த திட்டத்தை 15 ஆண்டுகள் மட்டுமே முதலீடு செய்தால் போதுமானது. ஆனால் திட்டத்தின் முதிர்வு 21 ஆண்டின் முடிவிலே கிடைக்கும் அதுவும் 21 ஆண்டுக்கான வட்டியோடு வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு இதுவரை 8 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. கடந்த 2021 கணக்கின்படி தமிழகத்தில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் 26,03,872 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்திரம்:
நாட்டு மக்களிடையே நீண்ட கால முதலீட்டை ஊக்குவிப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் கிசான் விகாஸ் பத்திரம். இந்த திட்டத்தின் கால அளவு 115 மாதங்கள். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் இதில் முதலீடு செய்யலாம், அதிகபட்சமாக இதற்கு வரம்பு கிடையாது. 7.5 சதவிகித கூட்டு வட்டி இதற்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் இரட்டிப்பான பலனை நீங்கள் பெறலாம்.
தேசிய சேமிப்பு பத்திரம்: (NSC)
தேசிய சேமிப்பு பத்திரம் திட்டம் ஐந்து ஆண்டுகள் கால அளவு கொண்டது. இதில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம், இந்த திட்டத்திற்கும் அதிகபட்சத்தில் வரம்பு கிடையாது.. 7.7 சதவீத கூட்டு வட்டி வழங்கப்படும் இந்த திட்டத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிஎம் குழந்தைகளுக்கான திட்டம் (PM care of child scheme)
இந்த திட்டம் கோவிட் - 19 தொற்று நோயால் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது தத்தெடுக்கப்பட்ட பெற்றோர் அல்லது உயிர்பிழைத்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியால் 2021 மே 29ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இணைந்த அனைத்து குழந்தைகளுக்கும் சுமார் 10 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் தங்குவதற்கான இடம், பள்ளி கல்வி, உயர்கல்வி, ஐந்து லட்சத்திற்கான காப்பீடு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 1ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செல்லும் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் தலா 20 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 32 மாநிலங்களில் 4,532 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.