போஜ்சாலா கோவிலா? மசூதியா? தொடரும் சர்ச்சை... தொல்லியல் துறை அறிக்கை என்ன சொல்கிறது?
By : Bharathi Latha
மத்தியப்பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் போஜ்சாலா என்ற கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலம் தங்களுக்கு சொந்தம் என்று இந்து, இஸ்லாமிய மதத்தினர் உரிமை கொண்டாடுகின்றனர். போஜ்சாலா கட்டிடம் இந்து மத கடவுளான சரஸ்வதியின் வழிபாட்டு தலம் என்று இந்து மதத்தினர் கூறுகின்றனர். அதேபோல் போஜ்சாலா கட்டிடம் கமல் மவுலா மசூதி என்று இஸ்லாமிய மதத்தினர் கூறுகின்றனர். கிட்டத்தட்ட அயோத்தி, வாரணாசி ஆகிய இடங்களில் ஏற்பட்ட பிரச்சினை போலவே இங்கும் பிரச்சினை நிலவுகிறது.
இந்த கட்டித்தில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது.இதனிடையே, போஜ்சாலா கட்டிடம் இந்து மத கடவுள் சரஸ்வதியின் கோவில் என்றும் அதில் இந்து மதத்தினர் மட்டும் வழிபாடு நடத்த அனுமதிக்கும்படி இந்து நீதி முன்னணி அமைப்பு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 22ம் தேதி போஜ்சாலா கட்டிடத்தில் இந்திய தொல்லியல்துறை ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 90 நாட்களாக போஜ்சாலா கட்டிடத்தில் ஆய்வு நடத்திய தொல்லியல்துறை உயர் நீதிமன்றத்தில் 2,000 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் தொல்லியல்துறை மேலும் கூறும் போது, "சர்ச்சைக்குரிய போஜ்சாலா கட்டிடத்தில் இந்து மத வழிபாட்டு தலம் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தில் 94 சிற்பங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் கற்கல், பாறைகல், மார்பில் கற்களால் செய்யப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் கடவுள் விநாயகர், பிரம்மா, நரசிம்மா, பைரவா, பிற கடவுள்கள், மனிதர், விலங்குகளின் உருவங்களை கொண்டுள்ளன. இந்த சிற்பங்கள் சிதைக்கப் பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இது பற்றி கூறும் பொழுது, "போஜ்சாலா மசூதி அல்ல, இந்துக் கோவில் தான் என்று நீதிமன்றத்தில் அறிக்கையை தொல்லியல்துறை சமர்பித்துள்ளது. தொடர்ந்து வழிபாட்டு உரிமையை மீட்க போராடி வரும் மத்திய பிரதேச இந்துக்கள் நல்ல தீர்ப்பிற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் அத்தகைய நல்ல தீர்ப்புக்காக காத்துக் கொண்டு இருப்பதாக" அவர்கள் தகவலை பகிர்ந்து வருகிறார்கள்.
Input & Image courtesy: Swarajya News