Kathir News
Begin typing your search above and press return to search.

மின் கட்டண உயர்வால் சிறுகுறு தொழில்கள் முடங்கும் அபாயம்: கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை தொழில் அமைப்பினர் கோரிக்கை!

தமிழக அரசு மின் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி உள்ளதால், பல தொழிற்சங்கங்களில் இருந்தும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்றனர்.

மின் கட்டண உயர்வால் சிறுகுறு தொழில்கள் முடங்கும் அபாயம்: கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை தொழில் அமைப்பினர் கோரிக்கை!
X

KarthigaBy : Karthiga

  |  17 July 2024 6:15 PM GMT

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோவையில் உள்ள பல்வேறு தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் சுந்தரராமன் கூறும்போது, கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழில் துறை மந்த நிலையில் உள்ளது.100 ஆலைகள் மற்றும் விசைத்தறிகள் பல மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். இத்தகைய சூழலில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் தமிழக அரசு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்.

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் கூறும்போது, "தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சிறு,குறு நடுத்தர தொழில் முனைவோர் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்வாரியம் அமைச்சர்கள் மற்றும் முதல்வரிடம் நேரிலும் போராட்டங்கள் மூலமாகவும் தெரியப்படுத்தினோம். கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் தேர்தலை வெற்றி பெற்ற பின் மின் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் எம்.எஸ்.எம்.இ தொழில்கள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது" என்றார்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மிதுன் ராம்தாஸ் கூறும்போது , இன்று தொழில் துறையில் காணப்படும் பிரச்சினைகளில் முக்கியமானதாக மின் கட்டண உயர்வு கருதப்படுகிறது. ஏற்கனவே நெருக்கடியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மேலும் பாதிப்பை அதிகரிக்கும் என்றார். தமிழ்நாடு ஓப்பன் எண்டு நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறும்போது "ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட நிலை கட்டண உயர்வு, சூரிய ஒளி மின் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணம் விதிப்பு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி வரும் நிலையில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நூற்பாலைகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது " என்றார் .

இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் கூறும்போது பண மதிப்பிழப்பு, கரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழுமையாக மீண்டு வராத சூழலில் மின்கட்டண உயர்வு நெருக்கடியை அதிகரிக்கும்". என்றார். கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், 'கொசிமா' முன்னாள் தலைவர் சுருளிவேல் ஆகியோர் கூறும்போது தமிழ்நாடு மின்வாரியம் சிறு,குறு தொழில்களை முடக்கும் அழிக்கும் நோக்கத்தில் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. ஏற்கனவே நிலை கட்டணத்தை 430 சதவீதம் உயர்த்தியுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.

கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர். நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு எவ்வளவு? 2. 19 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு குறைந்த அளவாக யூனிட் ஒன்றுக்கு 20 காசுகள் உயரும். விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.1001 முதல் 1500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 20 பைசா, 1501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 25 காசுகள் உயரும். தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மிக குறைந்த அளவில் யூனிட் ஒன்றுக்கு 35 காசுகள் உயரும். 22.36 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூபாய் 15 உயரும். உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 35 பைசா உயரும். உயர் அழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 40 பைசா உயரும். நிலையான கட்டணங்கள் கிலோவாட் ஒன்றிற்கு ஒரு மாதத்திற்கு ரூ.3 முதல் ரூ.27 வரை உயரம்.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News