ஏஞ்சல் வரி ரத்தால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அடையும் பயன்கள்..
By : Sushmitha
நாம் ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி என பல வரிகளை கட்டி வருகிறோம். அந்த வகையில் ஏஞ்சல் வரியும் புழக்கத்தில் இருந்தது. ஆனால் இந்த வரியை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரத்து செய்துள்ளார். ஏஞ்சல் வரி என்றால் என்ன? இந்த வரியை ரத்து செய்வதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அடையும் பயன் என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்,
ஏஞ்சல் வரி:
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஏஞ்சல் வரி வழக்கத்தில் உள்ளது. பொதுவாக இந்த நிறுவனங்கள் அதன் சந்தை மதிப்பை விட அதிகமான விலைக்கு முதலீட்டாளர்களை ஈர்த்தால் ஏஞ்சல் வரி விதிக்கப்படுகிறது. அதாவது தனது பங்குகளை தனியார் நிறுவனங்களோ அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களோ நியாய விலையை விட அதிகமான விலைக்கு முதலீட்டாளர்களிடம் விற்றால், அதிகப்படியாக உள்ள தொகைக்கு மட்டும் இந்த வரி விதிக்கப்பட்டது. வருமான வரிச் சட்டத்தின் 56 ஆம் பிரிவு இரண்டின் கீழ் 30.9 விழுக்காடு வரி செலுத்தப்பட்டது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அடையும் பயன்:
இந்த வரி தற்பொழுது ரத்து செய்யப்பட்டிருப்பது தனியார் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி ஏஞ்சல் வரி விலக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகமாக தொடங்கப்படுவதற்கான புதிய சீர்திருத்தம் என்றும், மேலும் முதலீடு மீதான வரியான இந்த ஏஞ்சல் வரி தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பது முதலீட்டாளர்களை நிம்மதி அடைய வைத்துள்ளதாகவும் ஸ்டார்ட் அப் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எளிதாக முதலீடுகளை ஈர்க்க முடியும் எனவும், இதன் மூலம் நம் நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க திட்டமிட்டு இருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் நல்ல ஊக்குவிப்பை இது கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.