அறிவில் ஆராய்ச்சி பணிகளில் பெருமளவில் முதலீடு செய்துள்ள மத்திய அரசு!
அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் மத்திய அரசு பெரும் அளவில் முதலீடு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
By : Karthiga
அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் மத்திய அரசு பெருமளவில் முதலீடு செய்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தீர்வு காண அரசுக்கு நிதி ஆதாரங்கள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 11 வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
மரபுசார் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கு வளர்ந்த நாடுகள் தரப்பில் பெரும் நிதி உதவி உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அதற்காக காத்திருக்காமல் பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை தனது சொந்த பணத்தில் நிறைவேற்றுகிறது இந்தியா. நாட்டில் இப்போது உள்ள வரிகளைக் குறைக்க முடியாதா என்ற மக்களின் கேள்விக்கு நான் பதிலளிக்க வேண்டியுள்ளது.
இந்தியாவின் சவால்கள் மிகவும் கடினமானவை. அவற்றை எதிர் கொள்வதற்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கும் அரசுக்கு நிதியாதாரங்கள் தேவை .இந்தியாவின் சவால்களை அறிவார்ந்த மக்கள் புரிந்து கொள்வர். வளரும் நாடான இந்தியா மரபுசார் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு தனது சொந்த பலத்தில் நகர்கிறது. வேறு எங்கிருந்தும் பணம் வரும் என நாம் காத்திருக்க முடியாது.
எனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பில் கூடுதல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இந்த அரசு பேசுவதோடு நின்றுவிடாமல் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இந்த பணம் விதிவிதிப்பின் மூலம் ஈட்டப்பட்டதாகும். மக்களுக்கு தொல்லை இல்லாமல் அரசுக்கு வருவாய் ஈட்டுவதே எனது பணி. இதை உறுதி செய்து வருகிறேன் என்றார் நிர்மலா சீதாராமன்.