போன வருஷம் சனாதன ஒழிப்பு மாநாடு, இந்த வருஷம் முத்தமிழ் முருகன் மாநாடு! பின்னணியை உடைத்த அண்ணாமலை!
By : Sushmitha
தமிழகத்தில் திமுக தனது ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து ஒரு வகையான இந்து மத எதிர்ப்பு மற்றும் இந்து மத நம்பிக்கைகள் குறித்த விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வந்தது. குறிப்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு என்ற மாநாட்டில் தமிழக முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி கலந்து கொண்டு மாநாட்டின் தலைப்பை பாராட்டியதோடு சனாதனத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டு, சனாதனத்திற்கு ஒரு புது வரையறையை கொடுத்தார். ஆனால் உதயநிதியின் இந்த கருத்திற்கு பல விமர்சனங்கள் குவிந்தது. குறிப்பாக ஒரு மாநிலத்தின் அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் அதே மாநிலத்தில் உள்ள ஒரு சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை இகழ்த்தி பேசுவது மிகவும் தவறானது என்று பலதரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தது.
இதனை அடுத்தும், மறைமுகமாகவோ, நேரடியாகவோ இந்துமத எதிர்ப்பையும் இந்து சமய நம்பிக்கையையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் திமுக தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. உதாரணமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு அதன் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பிதழ்கள் தரப்படும் அதைப் புறக்கணித்ததோடு மட்டுமின்றி, மசூதியை இடித்து விட்டு கட்டி இருக்க வேண்டாம் அது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்ற வகையில் உதயநிதி மீண்டும் ஒரு தரப்பினர் சார்ந்த கருத்தை முன் வைத்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. திமுகவின் இந்த கருத்துக்களால் திமுக இந்து விரோத கட்சி என்ற ஒரு பிம்பமும் உருவானது சமூக வலைதளத்தில் இதை வைத்தே பலரும் பல விதமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி விட்டோம் என்று நினைத்து யோசித்து திமுக தற்பொழுது புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதாவது இந்த சமய அறநிலைய துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை ஏற்பாடு செய்து பிரம்மாண்டமாக ஆரம்பித்து உள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கும் பொழுது, 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ச்சியாக இந்து மத எதிர்ப்பு அல்லது விரோத கட்சி என்ற பெயரை திமுக பெற்று வருவது நல்லதல்ல என்று சிந்தித்து அறிவாலய தலைமை இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்; இந்த ஆண்டு முருகப் பெருமானுக்கு பிரமாண்டமான கொண்டாட்டத்தை நடத்துகிறார்கள். இரண்டு நிகழ்வுகளிலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் இருப்பது இந்த 2 படங்களின் பொதுவான அம்சமாகும். மக்களின் கோபத்தை உணர்ந்தால் திமுக தனது திரைக்கதையை துளி துளியாக மாற்றி விடும். ஆனால் முருகப்பெருமான் இந்த நாடகத்தை பார்க்கிறார் என்பதை மறக்கவேண்டாம்! என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.