சிறந்த நிர்வாகம் மற்றும் முன்னேற்றத்திற்கான அடுத்த நிலையாக லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் - உள்துறை அமைச்சகம் முடிவு!
லடாக் யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
By : Karthiga
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த 2019 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு சட்டம் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீர் சட்டசபை அந்தஸ்து கொண்டது. இங்கு பொது தேர்தல் மூன்று கட்டமாக விரைவில் நடைபெற உள்ளது. லடாக்யூனியன் பிரதேசம் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த யூனியன் பிரதேசத்தில் தற்போது லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன .
லடாக் யூனியன் பிரதேசம் பரப்பளவில் பெரிய யூனியன் பிரதேசமாகும். இதனால் நிர்வாக வசதிக்காக இங்கு கூடுதலாக ஜான்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது. இந்த முடிவு பற்றிய உள்துறை மந்திரி அமித்ஷா சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் "இந்த முடிவின் மூலம் புதிய மாவட்டங்களான ஜான்ஸ்கர், திராஸ், ஷாம்,நுப்ரா,சாங்தாங் ஆகியவை நிர்வாகத்தை வலுப்படுத்தும். மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை அவர்களது வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் இந்த ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு லடாக்கில் மொத்தம் ஏழு மாவட்டங்கள் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
மேற்கண்ட 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு "கொள்கை அளவிலான ஒப்புதல்" வழங்குவதோடு, அந்த மாவட்டங்களுக்கு தலைமையகம், எல்லைகள், கட்டமைப்பு, பதவிகளை உருவாக்குதல் ,மாவட்ட உருவாக்கம் தொடர்பான வேறு பல அம்சங்களை மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைக்குமாறு லடாக் நிர்வாகத்தை உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
இந்த குழுவின் அறிக்கையை பெற்ற பிறகு அதன் அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான இறுதி முன்மொழிவை லடாக் யூனியன் பிரதேசம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். இதற்கிடையில் லடாக்கில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் தனது எக்ஸ் தளத்தில் "லடாக்கில் ஐந்து மாவட்டங்களை உருவாக்குவது சிறந்த நிர்வாகம் மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு படி ஆகும்" என்று கூறியுள்ளார்.