அரியானாவுக்கான தேர்தல் அறிக்கையில் மக்கள் மனம் குளிரும் வாக்குறுதிகளை தெறிக்க விட்ட பாஜக!
அரியானாவில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 2100 வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
By : Karthiga
அரியானாவில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க தீவிர களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அந்த கட்சி நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் தேசிய தலைவரும் மத்திய சுகாதார மந்திரியுமான ஜே.பி.நட்டா இந்த அறிக்கையை வெளியிட்டார். பாஜக தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அனைத்து பெண்களுக்கும் மாதம்தரும் ரூபாய் 2100, குறைந்தபட்ச ஆதரவு விலையில் 24 பயிர்கள் கொள்முதல், அரியானாவை சேர்ந்த அனைத்து அக்னி வீரர்களுக்கும் அரசு வேலை ஆகிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இளைஞர்களுக்கு இரண்டு லட்சம் வேலை வாய்ப்பு, 500க்கு கியாஸ் சிலிண்டர் , கிராமம் மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு 5 லட்சம் வீடுகள் வழங்கப்படும் .
நாட்டின் எந்த அரசு மருத்துவக் கல்லூரி அல்லது இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் அரியானா மாநில இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் பிரிவு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும். மேலும் கல்லூரி செல்லும் கிராமப்புற மாணவிகளுக்கு 'ஸ்கூட்டர்' போன்ற முக்கிய வாக்குறுதிகள் பாஜக தமிழ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இவற்றைத் தவிர புதிய வந்தே பாரத் ரயில்கள், 10 தொழில் நகரங்கள் ரூபாய் 10 லட்சம் மருத்துவ காப்பீடு, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு 5 லட்சம் வரை இலவச சிகிச்சை உள்ளிட்டவற்றையும் பாஜக வாக்குறுதியில் அளித்திருக்கிறது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ஜே.பி நட்டா காங்கிரஸ் கட்சியை சாடினார். தேர்தல் அறிக்கையை வெறும் சம்பிரதாயத்திற்கு வெளியிடுவதாகவும் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல் மந்திரி நயாப் சிங் சைனி, மத்திய மந்திரிகள் மனோகர்லால் கட்டார், ராவ் இந்தர்ஜித் சிங் , கிரிசன் பால் குருஜார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .அரியானா சட்டசபை தேர்தலுக்கு நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது .அதில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 2000 வழங்கப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.